சிங்கப்பூரில் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் தங்கள் வாழ்நாளுக்குப் பிறகு அன்புக்குரியவர்களுக்குத் தங்கள் சொத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து அவர்களில் பலர் இன்னும் திட்டமிடவில்லை என்று முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
சொத்தைப் பிரித்துக் கொடுத்தல் பற்றி கலந்துரையாடுமாறு அவர்களைத் திருவாட்டி ஹலிமா கேட்டுக்கொண்டார்.
மூத்தோர் பராமரிப்பாளர் கூட்டுறவு அமைப்பின் ஏற்பாட்டில் பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திருவாட்டி ஹலிமா பேசினார்.
கருத்தரங்கில் ஏறத்தாழ 120 பேர் கலந்துகொண்டனர்.
மூத்தோர் இறந்ததும் அவர்களது அன்புக்குரியவர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்திருப்பர் என்றும் யார் யாருக்கு என்னென்ன சொத்துகள் தரப்பட வேண்டும் என்று மூத்தோர் முன்கூட்டியே உயில் எழுதி வைத்துவிட்டால் அது குடும்பத்தாருக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் சனிக்கிழமை (மே 17) நடைபெற்ற கருத்தரங்கில் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
உயில் எழுதுவது போன்ற சொத்துத் திட்டமிடல் பற்றிப் பலர் பேச விரும்புவதில்லை என்பது தமக்குத் தெரியும் என்றார் அவர்.
மரணம் குறித்தும் சொத்து குறித்தும் மூத்தோரிடம் பேச இளையர்கள் தயங்கக்கூடும் என்று அவர் கூறினார்.
சொத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து பலரைப்போல தாமும் நீண்டகாலமாகவே சிந்தித்து வருவதாகவும் ஆனால் அதற்கான ஏற்பாடுகளை இன்னும் தொடங்கவில்லை என்றும் திருவாட்டி ஹலிமா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்குத் தற்போது 71 வயதாகிறது. எனவே, சொத்தைப் பிரித்துக் கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாரான திருவாட்டி ஹலிமா.
உயில் எழுதுவது, நீண்டகால அதிகாரப் பத்திரம் போன்றவை சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் திட்டமிடலின்கீழ் வரும்.
ஒருவர் தமது மன ஆற்றலை இழந்தால் நீண்டகால அதிகாரப் பத்திரம் இருக்கும் பட்சத்தில், அவர் சார்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் முடிவுகளை எடுக்கலாம்; பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.