இந்தியச் சமூக அமைப்புகள் வெற்றிபெறவும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது அவசியம் என்றும் அவற்றில் அனுபவம் மிக்கவர்களும் இளையர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவை மே 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிண்டா, நற்பணிப் பேரவை போன்ற இந்தியச் சமூக அமைப்புகளில் தலைமைத்துவ மாற்றத்தை எதிர்பார்க்கலாமா என்று தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.
புதிதாகப் பதவியேற்றுள்ள இளம் இந்திய அமைச்சர்களைச் சமூக அமைப்புகளில் ஈடுபட ஊக்குவிப்பதில் தம்மைப் போன்ற அமைச்சர்களுக்கு முக்கியப் பங்குள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திரு தினேஷ் வாசு தாஸ் துணை அமைச்சராவதையும் திரு முரளி பிள்ளை மூத்த துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் சண்முகம், அவர்களால் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்.
“புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களைச் சமூக அமைப்புகளில் ஈடுபடுத்தி, அவர்கள் அனுபவம்பெற வழிவகுத்து, பின்னர் கூடுதல் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்யவேண்டும். என்னைப் போன்ற அமைச்சர்களுக்கு அதில் முக்கியப் பங்கு உள்ளது,” என்றார் திரு சண்முகம்.
புதிதாக அறிவிக்கப்பட்ட அமைச்சரவை குறித்துக் கருத்துரைத்த அவர், “சிங்கப்பூர் இதுவரை வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு அமைச்சரவையில் புதுமுகங்களும், மூத்த அமைச்சர்களும் கலவையாக இடம்பெற்றிருப்பதும் முக்கியக் காரணம்,” என்றார்.
திரு டியோ சீ ஹியன், திரு இங் எங் ஹென், திரு ஹெங் சுவீ கியட் உள்ளிட்ட அனுபவமிக்க அமைச்சர்கள் அறுவர் ஓய்வு பெற்றதையும் இளையர்கள் ஒன்பது பேர் உள்நுழைந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இளம் அமைச்சர்களுக்கு, உரிய அனுபவம் வந்த பின்னர் மூத்த அமைச்சர்கள் அவர்களுக்கு வழிவிடுவதும் வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சராகத் தொடரவுள்ள திரு சண்முகம் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதுகுறித்துக் கருத்துரைத்த அவர், “பாதுகாப்பு, தற்காப்பு தொடர்பில் நாட்டுக்கு எந்த வகையில் பிரச்சினைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றவாறு செயல்படுவது அப்பதவியின் நோக்கம்,” என்று சொன்னார்.
ஒருங்கிணைப்பு அமைச்சர் என்ற நிலையில் தற்காப்பு, உள்துறை, வெளியுறவு, சட்டம், மின்னிலக்க, தகவல் மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுகளுடன் இணைந்து உரிய வகையில் செயல்படுவது தமது பணி என்றார் அவர். 17 ஆண்டுகள் சட்ட அமைச்சராகச் செயல்பட்ட திரு சண்முகம், “எட்வின் டோங் திறமையானவர். அவர் தற்போது அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பு,” என்றார்.