சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கமும் முக்கிய வங்கிகளும் பிள்ளைகள், பிற குடும்ப உறுப்பினர் போன்ற நெருக்கமானவர்களால் மூத்தோர் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதைத் தீவிரமாகத் தடுக்கும் வழிகாட்டிகளை உருவாக்குகின்றன.
மூப்படையும் சமூகத்துக்கு இடையே நம்பிக்கைக்குரியவர்களால் மூத்தோர் பண ரீதியாக ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகச் சங்கத்தின் இயக்குநர் ஓங் - ஆங் ஐ பூன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து அது தொடர்பான திட்டங்கள் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வங்கிக் கிளைகளில் உள்ள முன்னணி ஊழியர்கள் மூத்தோர் ஏமாற்றப்படுவது தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிய பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
குடும்ப உறுப்பினரால் நிதி ரீதியாக ஏமாற்றப்படும் மூத்தோரை அடையாளம் கண்டு அத்தகையோருக்கு உதவ யுஓபி அதன் கிளை ஊழியர்களுக்குக் கடந்த மே மாதத்திலிருந்து பயிற்சி அளித்து வருகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து யுஓபி வங்கிக் கிளைகள், குறிப்பாகக் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ளவற்றில் குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றப்படும் மூத்தோர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை வங்கி அடையாளம் கண்டுள்ளது.
பாய லேபாரில் உள்ள அதன் கிளையில் அத்தகைய ஐந்து சம்பவங்களை ஊழியர்கள் கண்டறிந்தனர். கடந்த ஆண்டில் அத்தகைய ஒரு சம்பவம் மட்டும் ஏற்பட்டது.
ஜூரோங் பாயிண்ட் வங்கிக் கிளையில் இவ்வாண்டு நான்கு சம்பவங்கள் கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டு இரண்டு சம்பவங்கள் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய சூழலில் உள்ள மூத்தோர் வழக்கமாக அச்சத்துடன் காணப்படுவர் அல்லது பணத்தை எடுக்க சம்மதம் கேட்கும்போது அமைதியாக இருப்பர் என்று அதிகாரிகள் கூறினர்.
மூத்தோருடன் வந்தவர்கள் அல்லது அவர்கள் சார்பாகச் செயல்படுவோர் அதிகம் பேசுவதாக ஊழியர்கள் கண்டறிந்தனர்.