60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த சிங்கப்பூர் குடிமக்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் 800 வெள்ளி எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் 600 வெள்ளி மதிப்புள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை ஜூலை 22ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் சமூக மன்ற பற்றுச்சீட்டுகள் (சிடிசி) போல் இல்லை. சிடிசி பற்றுச்சீட்டுகள் குடும்பங்களுக்காக வழங்கப்படுகிறது. எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் தனி நபர் சார்ந்தது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 21 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகனுக்கும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் விளக்கி இருந்தார்.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற மூத்தோர்கள் go.gov.sg/sg60v என்ற இணையப் பக்கத்தை நாடவும். பற்றுச்சீட்டுகளை ஜூலை 1 காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
21 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி முதல் go.gov.sg/sg60v இணையப் பக்கத்தில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பற்றுச்சீட்டுகளை சிடிசி பற்றுச்சீட்டுகள் போலவே பயன்படுத்தலாம். சிடிசி பற்றுச்சீட்டுகளை ஒப்புக்கொள்ளும் கடைகள் அனைத்திலும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்த வேண்டும்.
கிட்டத்தட்ட 3 மில்லியன் சிங்கப்பூரர்கள் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெறவுள்ளனர். அதன் மொத்த தொகை 2.02 பில்லியன் வெள்ளியாகும்.
“சிங்கப்பூரைக் கட்டியெழுப்பிய பயணத்தில் பாடுபட்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலைச் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணாளி மூலம் அதை அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சிங்கப்பூரர்களுக்கு எஸ்ஜி60 தபால் அட்டையும் அஞ்சல் வழி கிடைக்கவுள்ளது. அது மாற்றுத்திறன் கொண்ட கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. அந்த அஞ்சலில் பிரதமர் வோங்கின் வாழ்த்துகளும் இருக்கும்.