தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நலமாக மூப்படைய மூத்தோருக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும்

2 mins read
2b641047-d435-4d57-92f1-0cbb489a9653
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லீ. - படம்: சாவ் பாவ்

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் தனியார்ப் பேட்டைகளில் வசிக்கும் மூத்தோர் இனி வீட்டுக்கு அருகிலேயே துடிப்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

ஜாலான் மாஸ் குனிங் தனியார்ப் பேட்டையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட புதிய வசிப்போர் நிலையம் அதற்கு வழியமைக்கும்.

வெஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்கள் குறிப்பாக மூத்தோர் மேம்பட்ட முறையில் மூப்படைய, கழக வீடுகள் மட்டுமன்றி தனியார்க் குடியிருப்பிலும் உகந்த வசதிகளைச் செய்துதருவதில் கவனம் செலுத்தப்படும் என்றார் புதிய நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ.

‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீவக குடியிருப்புப் பகுதிகளிலும், தனியார்க் குடியிருப்புப் பகுதிகளிலும் கூடுதலான எண்ணிக்கையில் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களை அமைத்துத் தர முயற்சி எடுக்கவுள்ளன.

புதிய வசிப்போர் நிலையத்தில் தனியார்ப் பேட்டையில் வாழும் மூத்தோர் ஒன்றுகூடி, பிடித்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிடலாம்.

“ஜாலான் மாஸ் குனிங் தனியார்ப் பேட்டையில் மூத்தோர் பலர் வசிக்கின்றனர். அவர்களிடம் பேசியபோது நேரம் செலவிடத் தங்களுக்கென ஒரு பொது இடம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். உட்புற வசதி இருந்தால் அவர்களால் கூடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். கூட்டுரிமைக் குடியிருப்புகளிலும் இத்தகைய வசதிகளை எவ்வாறு செய்துதரலாம் என்பதை ஒட்டி நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று சமூக சேவை ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லீ கூறினார்.

மேலும், கிளமெண்டி விளையாட்டு அரங்கம் மறுசீரமைக்கப்படும்போது மூத்தோருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றார் திரு லீ.

அமைச்சர் லீயுடன் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்கும் நிலையத் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

“சுகாதார அமைச்சு அடுத்த ஐந்து ஆண்டுகளில் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கிட்டத்தட்ட $800 மில்லியன் ஒதுக்கியுள்ளது. தனியார்க் குடியிருப்புப் பேட்டைகளில் வசிக்கும் மூத்தோருக்கு அருகில் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள் பெரிதாக இல்லை எனக் கூறியுள்ளனர்,” என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

மூத்தோர் மருத்துவரைக் காணச் செல்வது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற வகைகளில் துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வரலாம் என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாலான் மாஸ் குனிங் தனியார்ப் பேட்டையில் வசித்து வரும் 75 வயது திரு ஃபெட்டிமா நாயகம் சேவியர், “ இந்தப் புதிய நிலையத்தில் பல நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். மூத்தோருக்கு உதவ இது நல்ல முயற்சி,” என்றார்.

அமைச்சர் ஓங்கும் அமைச்சர் லீயும் புதிய வசிப்போர் நிலையத் திறப்பு நிகழ்ச்சியின்போது மூத்தோருடன் கலந்துரையாடினர்.
அமைச்சர் ஓங்கும் அமைச்சர் லீயும் புதிய வசிப்போர் நிலையத் திறப்பு நிகழ்ச்சியின்போது மூத்தோருடன் கலந்துரையாடினர். - படம்: சாவ் பாவ்
குறிப்புச் சொற்கள்