மரினா பாலத்தில் ஆரஞ்சுக் கடலெனச் ஏறக்குறைய 50 முதியவர்கள் கூடிப் பங்கேற்ற ‘ஸும்பா’ ஆட்டம் உற்சாகமிக்கதாய் இருந்தாலும் அதில் முக்கியமானதொரு நோக்கம் அடங்கியிருந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் 2008ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ‘ஆரஞ்ச் த வோர்ல்ட்’ இயக்கம் தொடங்கப்பட்டது.
அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தோ பாயோ, அங் மோ கியோ வட்டாரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் முதியவர்கள், புதன்கிழமை (டிசம்பர் 4) ஏற்பாடு செய்யப்பட்ட ஸும்பா நிகழ்வில் 10 தொண்டூழியர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.
ஏறத்தாழ 100 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சிங்கப்பூர் ரோட்டரி சங்கத்தின் பங்காளி ‘இன்னர் வீல் கிளப் வெஸ்ட்’, ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் 28 வயதுக்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
பொதுவாக ஒளிமயம், நம்பிக்கை ஆகிய இரண்டையும் ஆரஞ்சு வண்ணம் குறிக்கும்.
கொள்ளைநோய்போல் அனைத்துலக ரீதியில் தலைவிரித்தாடும் பிரச்சினையாக பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை மாறிவிட்டது. இதைக் கையாள்வதற்காக நாடுகள், சிவில் சமூகம், மகளிர் அமைப்புகள், இளையர்கள், தனியார்ப் பிரிவினர், ஊடகத்துறையினர், ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மகளிர் பிரிவு நிர்வகிக்கும் இந்த இயக்கம் அழைப்பு விடுப்பதாக அமைந்துள்ளது.
இந்த இயக்கத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று வருகின்றன.

