சிறு பிள்ளைகளின் உணர்ச்சி, அறிவாற்றல், உடல் நலனில் உணர்திறன் கொண்ட பராமரிப்பு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆராய, உள்ளூர் ஆய்வாளர்கள் சிங்கப்பூரின் மிகப்பெரிய பெற்றோர் பயிற்சி சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
உணர்திறன் கொண்ட பராமரிப்பு என்பது அழுகை அல்லது ஒரு குறிப்பிட்ட நடத்தை போன்ற குழந்தையின் சைகைகளைக் கவனித்து, அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு, உடனடியாகவும் பொருத்தமான முறையிலும் பதிலளிக்கும் பராமரிப்பாளரின் திறனாகும்.
‘லவ்விங்’ ஆய்வு என்று அழைக்கப்படும் இது, காணொளிக் கருத்துசேர்ப்பு முறையைப் பயன்படுத்தும். இது வீடுகளுக்குச் சென்று பார்வையிடும் ஒரு திட்டமாகும். இதில் பெற்றோர் மற்றும் குழந்தைக்கு இடையிலான தொடர்புகளின் காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் குடும்பங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கருத்துகள் வழங்கப்படும்.
மே 26 முதல் 624 குடும்பங்களை இதில் இணைக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சிங்கப்பூரில் பெற்றோர் தொடர்பான மிகப் பெரிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையாக அமைகிறது. ஆராய்ச்சியியல் துறையில் இம்முறை உயர்ந்த தரமாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, பெற்றோர் வளர்ப்பு தொடர்பான இம்முறையிலான சோதனைகள் முதன்மையாகப் பிரசவத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் அல்லது குழந்தைப் பருவத்தில் பயன்படுத்தப்படும் கைப்பேசிச் செயலிகளிலேயே கவனம் செலுத்தின. அவற்றுள் மிகப்பெரிய அளவிலான ஆய்வில் அதிகபட்சமாக 200 தம்பதிகள் (பெற்றோர்) மட்டுமே பங்கேற்றனர்.
தற்போதைய இந்த ஆய்வில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி, சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளி, ஏஸ்டார் மனித மேம்பாடு மற்றும் சாத்தியக்கூறு கழகம், கேகே பெண்கள், சிறார் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

