பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு சிங்கப்பூர் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து தயாராகி வருகிறது.
அவற்றில் ஒன்று வானிலை அறிவியல் ஆய்வுத் திட்டம். உயர்ந்து வரும் கடல் மட்டத்திலிருந்து சிங்கப்பூரின் கடலோரங்களைப் பாதுகாக்க மேலும் இரண்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்த விவரங்களை மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் பேசினார்.
“இன்று நாம் அனுபவிக்கும் பசுமைக்கும், வாழ்வதற்கான சிங்கப்பூருக்கும் முந்தைய தலைமுறையினர் அடித்தளம் அமைத்தனர். எதிர்காலத் தலைமுறையினரும் பெருமையுடன் திரும்பிப் பார்க்க நாம் நமது பங்கை ஆற்றுவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடல் மட்ட உயர்வைச் சமாளிக்க, செந்தோசா தீவிலும் நாட்டின் தென்மேற்கு கடலோரத்திலும் கள ஆய்வு 2026ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கும்.
ஒவ்வொரு பகுதியிலும் மிகவும் பொருத்தமான கடலோரப் பாதுகாப்புத் தீர்வுகளைத் தீர்மானிக்க சிங்கப்பூர் தனது கடற்கரையோரங்களில் நடத்தி வரும் எட்டு நாடு தழுவிய ஆய்வுகளில் இந்த ஆய்வுகளும் அடங்கும்.
ஒவ்வொரு பகுதியின் தேவைகள் மற்றும் சவால்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படும். கடற்கரையோரங்களின் பாதிப்பு மற்றும் திட்டமிட்ட முன்னேற்றங்களுடன் சீரமைத்தல் போன்ற கூறுகளைக் கருத்தில் கொண்டு கடற்கரைப் பகுதிகள் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
செந்தோசா தீவு ஆய்வு, செந்தோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷனால் வழிநடத்தப்படும், இது தீவில் வரவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
தென்மேற்கு கடற்கரைப் பகுதியிலான ஆய்வு, 116 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியிருக்கும்.
துவாஸ் முதல் பாசிர் பாஞ்சாங் வரை ஆய்வு நடத்தப்படும் என்று தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
இப்பகுதி, குறிப்பாக நீர்முகப்பு தொழிற்பேட்டைகள், துவாஸ் துறைமுகம், பாசிர் பாஞ்சாங் முனையங்கள் உள்ளிட்ட துறைமுக வசதிகள், வெஸ்ட் கோஸ்ட் பார்க் பூங்கா போன்ற பொழுதுபோக்கு வசதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

