செந்தோசா கோவ் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கைமாறிய வீடுகளில் மூன்றில் இரண்டு பங்கு, நட்டத்திற்கு விற்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், மற்றப் பரிவர்த்தனைகளின் மறுவிற்பனை லாபம் கிட்டத்தட்ட 60 விழுக்காடு சுருங்கியுள்ளதாக ஆய்வொன்று காட்டுகிறது.
சாதகமான விற்பனையைப் பொறுத்தவரை கூட்டுரிமை வீடுகளைக் காட்டிலும் தரைவீடுகளின் நிலை சற்றுச் சிறப்பாக இருப்பதுபோல் தோன்றுகிறது. 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தரைவீடுகளின் மறுவிற்பனை ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட பாதி லாபத்தில் முடிவடைந்துள்ளன.
சிங்கப்பூரில் அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளிநாட்டினர் தரைவீடு வாங்கக்கூடிய ஒரே இடம் செந்தோசா மட்டுமே.
அங்குக் கட்டப்பட்டுள்ள 99 ஆண்டுக் குத்தகை வீடுகளின் மூலதன மதிப்பு, முதன்மை நிலப்பகுதியில் உள்ள சொத்துகளின் மதிப்பைக் காட்டிலும் நீண்டகாலமாகவே பின்தங்கியுள்ளது.
வீடுகள் அமைந்துள்ள பகுதி, விலை முதலியவை அவற்றுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
வெளிநாட்டினர் வீடுகளை வாங்குவதற்கான முத்திரை வரிகள் 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு கடுமையாக உயர்த்தப்பட்டன. அதனால் இத்தகைய சொகுசு வீடுகளுக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஆரம்பத்திலிருந்தே செல்வந்தர்களின் சொர்க்கபூமியாக இந்தத் தீவு விளம்பரப்படுத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026 ஜூன் வரையிலான காலத்தில், 64.5 விழுக்காட்டு மறுவிற்பனைப் பரிவர்த்தனைகள் லாபகரமானவையாக இல்லை எனத் தகவல்கள் காட்டுகின்றன. 2020 மார்ச் முதல் 2023 ஏப்ரல் வரை, இந்த விகிதம் 62.8 விழுக்காடாக இருந்தது.
நட்டம் ஏற்படுத்தும் பரிவர்த்தனைகளில் சராசரி நட்டம் 1.56 மில்லியன் வெள்ளியிலிருந்து 1.28 மில்லியன் வெள்ளியாகக் குறைந்துள்ளது. அதே வேளையில், லாபகரமான மறுவிற்பனைகளில் கிடைத்த ஒட்டுமொத்த லாபம் ஏறக்குறைய 62 விழுக்காடு சரிந்து 655,590 வெள்ளியாகப் பதிவாகியுள்ளது.
‘மொகல்.எஸ்ஜி’ எனும் சொத்து ஆலோசனை இணையவாசல் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றில் முத்திரை வரி, சொத்து வரி, சட்டக் கட்டணம், முகவர் கட்டணம் முதலியவை சேர்க்கப்படவில்லை.
“மொத்தத்தில், செந்தோசா கோவ் சொத்து உரிமையாளர்களுக்கு நிலைமை சாதகமாக இல்லை,” என்று ‘மொகல்.எஸ்ஜி’யின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மேக் கூறினார்.
குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட், நியூமார்க் ஆகிய சொத்து ஆலோசனை நிறுவனங்களின் தனித்தனி பகுப்பாய்வுகளும் அந்தப் பகுதியின் பெரும்பாலான மறுவிற்பனைப் பரிவர்த்தனைகள் நட்டத்தையே ஏற்படுத்தியதாகக் கண்டறிந்துள்ளன.
குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் நிறுவனத்தின் தரவுகள்படி, 2021 முதல் 2026ன் முற்பாதி வரை, விற்கப்பட்ட 244 கூட்டுரிமை வீடுகளில் 83 மட்டுமே லாபம் தந்தன. தரைவீடுகளைப் பொறுத்தவரை, விற்பனையான 47ல் 23 மட்டுமே லாபகரமாக இருந்தன.


