சிங்கப்பூரின் பிரசித்திபெற்ற ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களான ‘ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா’வும் ‘மரினா பே சேண்ட்ஸ்’சும் தங்கள் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. பேரளவில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கவும் பார்வையாளர்களை அதிகரிக்கவும் இந்த முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக அவை தெரிவித்தன.
சாங்கி விமான நிலையத்திற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக சிங்கப்பூர் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இவ்விரு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளன.
புதிய விளையாட்டுக்கள் அல்லாத பார்வையாளர்களை ஈர்க்கும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் 6.8 பில்லியன் வெள்ளி செலவிலான விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஜென்டிங் சிங்கப்பூர் குழுமம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) வெளியிட்ட மூன்றாம் காலாண்டுக்கான வர்த்தக மேம்பாட்டு அறிவிப்பில் தெரிவித்தது.
மேலும், மொத்தம் 700 அறைகள் கொண்ட இரண்டு புதிய ஆடம்பரமான ஹோட்டல்களை உள்ளடக்கிய நீர்முகப்பை மேம்படுத்தும் கட்டுமானம் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் அது கூறியது.
2022ஆம் ஆண்டு 1.75 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொடங்கப்பட்ட மரினா பே சேண்ட்சுக்குச் சொந்தமான மூன்று ஹோட்டல்களில் நடந்துவரும் புதுப்பிப்பு பணிகள் பற்றிய தகவல்களை அந்நிறுவனம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) வெளியிட்டது.
அதில், 775 ‘சூட்‘ அறைகள் உட்பட 1,850 புதிய ஹோட்டல் அறைகள் புதிதாக கட்டப்பட்டதாக அது கூறியது.