கடற்கரையை நேசிப்பவர்கள் செந்தோசா தீவில் உள்ள தஞ்சோங் கடற்கரையில் மீண்டும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடற்கரை உட்பட செந்தோசாவில் இருக்கும் மூன்று கடற்கரைகளும் பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவால் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி செந்தோசாவின் சிலோசோ கடற்கரையும் ஆகஸ்ட் 17ஆம் தேதி பலவான் கடற்கரையும் பார்வையாளர்கள் வருகைக்காக எண்ணெய்ப் படலங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்ட பிறகு திறக்கப்பட்டன.
எண்ணெய்க் கசிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சோங் கடற்கரையில் நீரின் தரம் வழக்கமான நிலைக்குத் திரும்பியதால் பொதுமக்கள் வருகைக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
செந்தோசா தீவில் இருக்கும் அனைத்துக் கடற்கரைகளும் மீண்டும் நீர் விளையாட்டுகளுக்கு முழுமையாகத் திறக்கப்பட்டன என்றும் கழகம் தெரிவித்தது.
மேலும், எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், தொண்டூழியர்கள், பங்குதாரர் நிறுவனங்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துகொள்வதாகக் கழகம் அந்த அறிக்கையில் சொன்னது.

