செந்தோசாவின் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் ‘செந்தோசா டிரக்’ எனும் பசுமை வாகனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அனைத்து உள்ளூர்த் தொடக்கப்பள்ளிகளிலும் வலம்வரும்.
அதன் தொடக்கமாக, கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளியில் ஜூலை 16ஆம் தேதி ‘டிரக்’ சுற்றுலாவும் இதர நடவடிக்கைகளும் நடைபெற்றன. கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அமைச்சர் லீ, மாணவர்களுடன் சேர்ந்து பசுமை வாகனத்தில் ஏறிக் கண்காட்சியைக் கண்டு ரசித்தார்.
பசுமைமிகு போக்குவரத்து முறைகளைத் தேர்ந்தெடுப்பது (சைக்கிள் அல்லது செந்தோசாவின் மின்பேருந்துகள், டிராம்கள்), இயற்கைக்கு இடையூறு விளைவிக்காமல் சுற்றுலாக்களில் ஈடுபடுவது, உள்ளூரில் தயாரான உணவுகளையும் காய்கறிகளையும் உண்பது போன்ற நல்ல பழக்கவழக்கங்களை இந்தக் கண்காட்சி மாணவர்களுக்கு உணர்த்துகிறது.
விளையாட்டு நடவடிக்கைகளை முடித்ததும் செந்தோசா பற்றிய கதைப் புத்தகத்தை மாணவர்கள் பெறலாம்.
நீடித்த நிலைத்தன்மை பற்றிய நகரும் கண்காட்சிக்கு செந்தோசா ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதன்முறை. சென்ற ஆண்டு அது ‘செந்தோசா பீச்’ நிலையத்தில் ‘ரைஸ்’ (RISE) எனும் நீடித்த நிலைத்தன்மைக் கண்காட்சியைப் படைத்திருந்தது.
“நீடித்த நிலைத்தன்மை என்பது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலிருந்தும் தொடங்குவது என்பதை மாணவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம்.
“அதற்கான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளைச் செந்தோசாவில் காணும்போது பசுமையான எதிர்காலத்துக்குத் தாங்களும் பங்காற்றலாம் என்பதை அவர்கள் உணர்வார்கள்,” என்றார் செந்தோசா மேம்பாட்டுக் கழகத் தலைமை நிர்வாகி தியென் குவீ எங்.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்த முறை செந்தோசாத் தீவுக்கு இம்மாணவர்கள் வரும்போது அவர்களால் செந்தோசாவின் பின்னணியில் உள்ள நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைப் பாராட்ட முடியும். தம் வீட்டுச் சூழலுடன் அவற்றைத் தொடர்புபடுத்தி, அன்றாட வாழ்விலும் பசுமைமிகு மாற்றங்களை அவர்கள் உண்டாக்குவர்,” என்றார் செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் உதவித் தலைமை நிர்வாகி (நிறுவன, நீடித்த நிலைத்தன்மைக் குழுமம்) லீ செ சியென்.
ஒவ்வொரு பள்ளியிலும் ‘செந்தோசா டிரக்’ இரு நாள்கள் இருக்கும். நவம்பர் மாதம் வரை கொங் ஹூவா, புக்கிட் வியூ, மேரிஸ் ஸ்டெல்லா, ஹேக் பெண்கள் ஆகிய தொடக்கப்பள்ளிகளுக்கு அது செல்லும். மாணவர்கள் சிற்றுண்டி வேளையிலும் பள்ளி முடிந்தும் அந்த வாகனத்தைப் பார்வையிடலாம்.
செந்தோசா டிரக் வெவ்வேறு சமூகக் குழுக்களுக்கும் சமூக நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்லும்.
செந்தோசாத் தீவின் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களில் ஒன்றாக, ‘கூல் நோட்’ (Cool Node) எனப்படும் வெப்பத்தைக் குறைக்கும் திட்டமும் சிலோசோ கடற்கரையில் சோதிக்கப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட சிறுவர்களுக்கான நீடித்த நிலைத்தன்மைக் கற்றல் பயணங்களும் செந்தோசாவில் நடைபெறுகின்றன.