2027ல் செந்தோசா நீர்ப்பூங்கா புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும்

2027ல் செந்தோசா நீர்ப்பூங்கா புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும்

படம்: ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா

18 Nov 2026 - 1:10 pm

2 mins read

செந்தோசாவில் உள்ள ‘அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்க்’ நீர்ப்பூங்காவைப் பார்க்க விரும்புவோர் இவ்வாண்டு முடிவதற்குள் அங்குச் சென்றுவரலாம்.

ஏனெனில், பேரளவிலான புதுப்பித்தல், உருமாற்றப் பணிகளுக்காக இந்தப் பூங்கா 2027ஆம் ஆண்டு முழுதும் மூடப்படவுள்ளது.

அதனை நிர்வகிக்கும் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா, நவம்பர் 15ஆம் தேதி அதன் சமூக ஊடகப் பக்கங்களில் இதனை அறிவித்தது.

2027 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். இருப்பினும், அனைவரும் இணைந்து உருவாக்கிய நினைவுகளுக்குத் தங்கள் இதயத்தில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்று அது குறிப்பிட்டது.

“நாம் பகிர்ந்துகொண்ட சாகசங்களுக்கும் இனி வரவிருக்கும் சாகசங்களுக்கும் வாழ்த்துகள். இது பிரியாவிடை அன்று, மீண்டும் சந்திப்போம்!,” என்று அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்க் கூறியது.

2012ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பூங்காவில் ரிப்டைட் ராக்கெட் (Riptide Rocket), பைப்லைன் பிளஞ்ச் (Pipeline Plunge) மற்றும் டியூலிங் ரேசர் (Dueling Racer) போன்ற சாகச சவாரிகள் உள்ளன.

மேலும், ‘ரெயின்போ ரீஃப்’ (Rainbow Reef) பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட பவளப்பாறை வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் நீச்சலடிக்கும் (snorkel) வாய்ப்பையும், ‘ரே பே என்கவுன்டர்’ (Ray Bay Encounter) பகுதியில் திருக்கை மீன்களுக்கு உணவளிக்கும் வாய்ப்பையும் இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

புத்தம் புதிய கருப்பொருளுடன் பூங்கா புதுப்பிக்கப்படும். விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா கூறியது.

ஏற்கெனவே குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி அட்டை வாங்கி வைத்திருப்போரை நிர்வாகம் தொடர்புகொள்ளும். நுழைவுச்சீட்டு தொடர்பான உதவிக்கு membership@rwsentosa.com எனும் மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்