தமது உணவங்காடிக் கடைக்கு கிடைக்கப் பெற்ற மின்கட்டண பரிவர்த்தனைகளை வில்லியம் ஃபோங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) இரவு சரிபார்த்துக்கொண்டு இருந்தபோது, ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதை அவர் உணர்ந்தார்.
அன்றைய தினம் மாலை பொழுதில் தமது கடையில் $7 உணவுக்காக யாரோ தவறுதலாக DBS PayLah செயலியில் $700 மாற்றிவிட்டதை ஃபோங், 52, அறிந்தார்.
சிராங்கூன் கார்டன் உணவு நிலையத்தில் Tian Jin Fong Kee எனும் கடை நடத்திவரும் அவர், இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரைத் தேட ஃபேஸ்புக்கில் இச்சம்பவம் குறித்து விளக்கி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இரு நாள்கள் கழித்து, லி எனும் வாடிக்கையாளர், ஃபோங்கின் கடைக்கு வந்து $693 தொகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஃபேஸ்புக்கில் ஃபோங் வெளியிட்ட மற்றொரு பதிவில் இதனைத் தெரிவித்தார்.
பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள லி தமது கடைக்கு வந்தபோது, அவர்தான் கூடுதல் கட்டணம் செலுத்தியவரா என்பதை உறுதிசெய்ய, அவர் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை தாம் சரிபார்த்துக்கொண்டதாக ஃபோங் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருப்பதாக ஃபோங் கூறினார்.
"தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களைப் பொறுத்தமட்டில், மின்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் கட்டணத் தொகையை அழுத்தும்போது அதற்கான அமைப்புமுறையை (format) தரநிலைப்படுத்துவது சிறந்தது.
"வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்துவதற்குமுன், தொகையைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
தொடர்புடைய செய்திகள்
"உணவுக் கடைக்காரர்களைப் பொறுத்தமட்டில், பிழைகளைத் தவிர்க்க கட்டண விவரங்களைச் சரிபார்க்கவும்," என்று ஃபோங் விவரித்தார்.
கடைக்காரரின் நேர்மையைக் கண்டு வாடிக்கையாளர் புகழாரம்
இதற்கிடையே, ஃபோங்கின் நேர்மையை லி வெகுவாகப் பாராட்டினார்.
வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றை தாம் பார்த்த பிறகுதான், உணவுக்கு தாம் கூடுதலாக $693 செலுத்தியதை லி, 55, உணர்ந்தார்.
கட்டணம் செலுத்துவதற்கு PayLah செயலியில் தொகையை அழுத்தும்போது தாம் கவனக்குறைவாக இருந்துவிட்டதை லி ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் தமக்கு அதிர்ச்சி தந்தபோதிலும், மின்கட்டண முறையைப் பயன்படுத்துவதை தாம் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற சொன்ன லி, இனி கட்டணம் செலுத்துவதற்குமுன் அதைச் சரிபார்த்துக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார்.


