வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் நோக்கில் சிராங்கூன், ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் நிலையங்கள் வரும் ஜூலை 6ஆம் தேதி இணைக்கப்பட உள்ளதாகக் காவல்துறை திங்கட்கிழமை (மே 11) தெரிவித்தது.
மாறிவரும் பாதுகாப்பு சவால்களையும் சமூகத் தேவைகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், முன்களச் செயல்பாடுகளை உருமாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இணைப்பு அமைகிறது.
தற்போது சிராங்கூன் அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பெரிய செயல்பாட்டுத் தளமாக அந்நிலையம் தக்கவைக்கப்படும். அது ஜூலை 6ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்போது, பொதுமக்கள் புகார் அளிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட சுய உதவிப் பகுதியையும் கொண்டிருக்கும்.
இதற்கிடையில், ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் நிலையத்தின் சேவை முகப்பு புதுப்பிக்கப்பட்டு, ஹவ்காங் வெஸ்ட் அக்கம்பக்கக் காவல் சாவடியாகச் செயல்படும். தற்போதுள்ள ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் சாவடி, 2027 நான்காம் காலாண்டுக்குள் ஹவ்காங் ஈஸ்ட் அக்கம்பக்கக் காவல் சாவடி என மறுபெயரிடப்படும்.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சிராங்கூன், ஹவ்காங் பேட்டைகள் உட்பட தீவு முழுவதும் உள்ள காவல் கண்காணிப்புக் கருவிகளின் எண்ணிக்கையை 200,000க்கும் மேலாகப் படிப்படியாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் காரணமாக சிராங்கூன், ஹவ்காங் பேட்டைகளில் காவல்துறையின் கண்காணிப்போ அவசரச் சூழல்களைக் கையாளுவதற்கான நேரமோ பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த இணைப்பு, பெரிய அளவிலான சமூகக் காவல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் சிக்கலான குற்றச் செயல்களைக் கையாள்வதில் கூடுதல் ஒருங்கிணைப்புடன் செயல்படவும் வழிவகுக்கும் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.
“ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வரும் வேளையில், அவசரமில்லாத சூழ்நிலைகளுக்கு இணையம் வாயிலாகவோ ஹவ்காங் அக்கம்பக்கக் காவல் சாவடியில் உள்ள சுய உதவி இயந்திரம் மூலமாகவோ பொதுமக்கள் புகார்களைப் பதிவுசெய்யலாம்,” என்று காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
நேரடிச் சேவை முகப்பு வசதி தேவைப்படுவோர், அங் மோ கியோ சவுத் அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லலாம்.
அவசரச் சூழல்களுக்கு 999 எனும் எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

