சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு கடைகளிலிருந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
விமான நிலையத்தின் டிரான்சிட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கைப்பை காணாமல்போனது குறித்து மார்ச் 23ஆம் தேதி தனக்கு தகவல் வந்ததாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
விமான நிலையக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள் மற்றும் விசாரணை மூலம் இந்திய நாட்டவரான அந்த ஆடவரை அடையாளம் கண்டனர்.
காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட அரைமணி நேரத்திற்குள் அந்த ஆடவர் தடுத்துவைக்கப்பட்டார். அதனால், சிங்கப்பூரிலிருந்து அவரால் வெளியேற இயலவில்லை.
கைக்கடிகாரங்கள், சட்டைகள், சாக்லெட்டுகள், துணைப்பொருள்கள் போன்றவற்றை நான்கு கடைகளிலிருந்து அந்த ஆடவர் திருடியதாக நம்பப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது எனக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சாங்கி விமான நிலையத்தில் 2025ல் இதுவரை குறைந்தது ஐந்து திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக அண்மைய சம்பவமாக, மார்ச் 15ஆம் தேதி இரு கடைகளிலிருந்து வாசனைத் திருவங்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மாது ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.