தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கணினிச் சேவையகங்களில் என்விடியா சில்லுகள்: அமைச்சர் சண்முகம் விளக்கம்

2 mins read
891430df-9066-4af0-baf3-c5f88facc8ec
சம்பந்தப்பட்ட கணினிச் சேவையகங்கள், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக்கு உள்ளான பொருள்களைக் கொண்டிருக்கக்கூடும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேம்பட்ட என்விடியா (Nvidia) சில்லுகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படும் கணினிச் சேவையகங்கள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் வேறு நாடுகளிலிருந்தோ அரசாங்கங்களிடமிருந்தோ வராவிட்டாலும் இதன் தீவிரம் கருதி, சிங்கப்பூர் அதிகாரிகள் தன்னிச்சையான விசாரணையைத் தொடங்கியதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

திங்கட்கிழமை (மார்ச் 3) நிதியமைச்சுக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

முதற்கட்ட விசாரணையில், அமெரிக்காவின் ‘டெல்’, ‘சூப்பர்மைக்ரோ’ நிறுவனங்களிலிருந்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கணினிச் சேவையகங்கள் அனுப்பப்பட்டது தெரியவந்தது. அவை பிறகு மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்றார் அமைச்சர்.

அந்தச் சேவையகங்களில் அமெரிக்கா ஏற்றுமதித் தடை விதித்துள்ள பொருள்களும் இடம்பெற்றுள்ளன.

இருந்தபோதும் அவை மலேசியா சென்று சேர்ந்தனவா அல்லது வேறொரு நாட்டுக்கு அனுப்பப்பட்டனவா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் திரு சண்முகம் கூறினார்.

கணினிச் சில்லு உற்பத்தி நிறுவனமான என்விடியாவுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றை அவர் சுட்டினார். அந்த வழக்கில், பிப்ரவரி 27ஆம் தேதி, ஆடவர் மூவர் மீது மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது.

கணினிச் சேவையகங்கள் சென்று சேரவேண்டிய இடம் குறித்துப் பொய்யான தகவல் அளிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். சிங்கப்பூருக்குள் அவ்வாறு பொய்யான தகவல் அளிக்கப்பட்டிருந்தால் சிங்கப்பூர் சட்டப்படி அது குற்றமாகக் கருதப்படும் என்றார் அவர்.

இந்தச் சம்பவம், பிப்ரவரி 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட ‘என்விடியா’ சம்பவத்துடன் தொடர்புடையதா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு சண்முகம், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் தம்மால் இது குறித்து அதிகம் சொல்ல இயலாது என்றார்.

இருந்தபோதும், அந்தக் கணினிச் சேவையகங்களில் என்விடியா சில்லுகள் இருக்கக்கூடும் என்று கருதப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், சிங்கப்பூரின் சட்டங்கள் மீறப்படுவது குறித்துத் தகவல் அளிக்கும் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படுவதில் எப்போதும் மகிழ்ச்சி என்றும் அவற்றின் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்