தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்கோளாற்றால் பல மணி நேரம் நிலைகுத்திய வடக்கு-கிழக்கு ரயில் சேவை

3 mins read
efa1793a-13db-4641-851e-1d6c4380a60e
மின்கோளாற்றால் பல மணி நேரம் வடக்கு-கிழக்கு ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. - படம்: சாவ்பாவ்

வடக்கு-கிழக்குப் பாதையின் ரயில் சேவைகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத் தடங்கலுக்குப் பிறகு மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. பெரிய அளவில் ஏற்பட்ட மின் கோளாற்றால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) சேவைத் தடங்கல் ஏற்பட்டது.

அந்தக் கோளாற்றால் ஒட்டுமொத்த செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவையும் நிலைகுத்தியது. இருப்பினும், அந்த ரயில் சேவை மாலை 3.34 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியது.

செங்காங் இலகு ரயில் சேவையிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
செங்காங் இலகு ரயில் சேவையிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. - படம்: சாவ்பாவ்

மாலை 5.20 மணிக்கு, ரயில்களை நிர்வகிக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் செங்காங்- பொங்கோல் இலகு ரயில் சேவை மாலை உச்சநேரத்திலிருந்து இரவு 9 மணி வரை ஒரு தண்டவாளத்தில் மட்டுமே செயல்படும் என்றது.

“ரயில் சேவைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வரும்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் சொன்னது.

செங்காங்- பொங்கோல் இலகு ரயில் நிலையங்களில் உள்ள குறிப்பிட்ட நிறுத்தங்களில் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன. வடக்கு-கிழக்குப் பாதையில் ரயில் சேவைத் தடங்கலின்போதும் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன.

வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் காலை சுமார் 11 மணிக்குச் சேவை தடங்கல் ஏற்பட்டது. ஃபேரர் பார்க், பொங்கோல் கோஸ்ட் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள 11 நிலையங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் சொன்னது.

சேவைத் தடங்கல் காரணமாகப் பயணிகள் சிலர் தண்டவாளம் வழி நிலையங்களிலிருந்து வெளியேற நேர்ந்தது.
சேவைத் தடங்கல் காரணமாகப் பயணிகள் சிலர் தண்டவாளம் வழி நிலையங்களிலிருந்து வெளியேற நேர்ந்தது. - படம்: வில்லி ஃபூ
- படம்: வில்லி ஃபூ

ஃபேரர் பார்க், புவாங்கோக் நிலையங்களுக்கு இடையே பிற்பகல் 12.50 மணிக்குச் சேவை மீண்டும் திரும்பியது. பிற்பகல் 2.10 மணிக்கு அது முழுமையாகச் செயல்பட தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகச் சொன்ன எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் சம்பவம் குறித்து விசாரிப்பதாகக் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்றான லிட்டில் இந்தியா ரயில் நிலையத்துக்குப் பிற்பகல் 1.30 மணியளவில் தமிழ் முரசு சென்றபோது, நிலைமையில் எந்தவித மாற்றமும் இல்லை.

ரயில் நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவதையும் இலவசப் பேருந்துச் சேவைகளையும் காண முடிந்தது. லிட்டில் இந்தியா நிலையத்திலிருந்து புறப்பட்டு ஃபேரர் பார்க் சென்ற ரயில் மீண்டும் லிட்டில் இந்தியாவுக்குத் திரும்பியபோது பயணிகளிடையே குழப்பம் நிலவியது.

“மதிய நேரம் என்பதால் ரயில் சேவையில் தடை ஏற்பட்டது பிரச்சினைதான்,” என்றார் லிட்டில் இந்தியாவுக்கு சாப்பிட வந்திருந்த திரு அமன்ஜீத்.

இந்நிலையில், வடக்கு கிழக்குப் பாதையில் ரயில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறு மின் இணைப்புச் சாதனத்தின் செயலிழப்பால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பணிமனை துணை மின்நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க, நிலப் போக்குவரத்து ஆணையப் பொறியாளர்களுடன் எஸ்பிஎஸ் டிரான்சிட் பொறியாளர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்,” என்று கூறினார்.

இலவசப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்திய சில பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிக்கான இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிக்கான இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோலிலிருந்து லிட்டில் இந்தியா வர முயன்ற திரு ராஜ் இலவச பேருந்துச் சேவையில் தன் மனைவியுடன் ஏறினார். “பேருந்து ஒவ்வொரு முனையத்திலும் நின்றுசென்றதால் நெடுநேரம் எடுத்தது. பொங்கோலிலிருந்து 12 மணிக்குக் கிளம்பிய நாங்கள் 2.10 மணிக்குத்தான் பூன் கெங் ரயில் நிலையத்துக்கு வந்தோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்