சிங்கப்பூர் சேவைத்துறை 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஈட்டிய மொத்த வருவாய், சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது, சேவைத்துறையின் பருவத்துக்கு ஏற்ப சரிசெய்யப்படாத இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 16.9 விழுக்காடு. தங்குமிடம், நிதி, காப்பீடு நிலச்சொத்து மேம்பாடு ஆகிய துறைகள் தவிர்த்து, இக்காலாண்டில் சேவைத்துறையின் மொத்த வருவாய் கிட்டத்தட்ட $1.58 டிரில்லியனை எட்டியுள்ளது. சேவைத்துறையின் காலாண்டு செயல்பாடு குறித்த அறிக்கையை சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்டது.
மொத்த விற்பனை தவிர்ந்த பிற சேவைத்துறைகளின் வருவாய் $283 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. கேளிக்கை, தனிநபர் சேவைகள், உணவு -பானம் ஆகிய துறைகளைத் தவிர்த்து, பெரும்பாலான தொழில்துறைகள் ஆண்டு அடிப்படையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.
குறிப்பாக, மின்னணு உதிரிபாகங்கள், பெட்ரோலியப் பொருள்களின் வணிகம் அதிகரித்ததால் மொத்த விற்பனைத் துறை அதிகபட்சமாக 27.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
போக்குவரத்து,சேமிப்புக் கிடங்கு சேவைத் துறைகள் ஆண்டு அடிப்படையில் 26.5 விழுக்காடு ஏற்றம் கண்டன. சரக்குக் கப்பல் கட்டணங்களின் உயர்வால் நீர்வழிப் போக்குவரத்துத் துறை வலுவான வளர்ச்சி கண்டது இந்த உயர்வுக்குக் காரணம்.
முக்கியமாகக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், விநியோகச் சேவைகளின் வளர்ச்சியினால், காலாண்டு அடிப்படையில் இத்துறைகள் 16.4 விழுக்காடு பருவத்துக்கு ஏற்ப சரிசெய்யப்படாத வளர்ச்சியைப் பதிவு செய்தன.
அதேவேளையில், கலை, விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள் குறைந்ததால் கேளிக்கை,தனிநபர் சேவைத் துறை 2.5 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.
காலாண்டு அடிப்படையில், சில்லறை வணிகம், உணவு - பானம், கல்வி, பொழுதுபோக்கு, தனிநபர் சேவைகள் தவிர்த்து, மற்ற அனைத்துத் துறைகளும் அதிக வருவாய் ஈட்டியுள்ளன.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பல்கலைக்கழகங்கள் பெற்ற கல்விக் கட்டண வருவாய் குறைந்ததன் காரணமாக, கல்வித் துறை 13.4 விழுக்காடு சரிவைக் கண்டது.


