இஆர்பி 2.0 எனப்படும் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக்கட்டண முறைக்காக (ERP 2.0) வாகனங்களில் புதிதாகப் பொருத்தப்பட்டு வரும் ஓபியு கருவி மூலம், விடுபட்ட இஆர்பி கட்டணங்களைச் செலுத்தலாம்.
புதிய ஓபியு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு செப்டம்பர் 1 முதல் அந்த வசதி கிடைக்கும்.
இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) தனது ஃபேஸ்புக் பதிவில் அறிவித்தது.
இஆர்பி கட்டண பாக்கி இருந்தால் அதனைத் தெரிவிக்கும் ‘ஐகான்’ ஓபியு கருவியின் தொடுதிரையில் தோன்றும்.
உடனே அந்த திரையில் உள்ள பொத்தானை அழுத்தி, பாக்கிக் கட்டணத்தை நேரடியாகச் செலுத்திவிடலாம். ஆயினும், வாகனம் நின்றிருக்கும்போது மட்டுமே அது சாத்தியப்படும். வாகனம் ஓடிக்கொண்டு இருக்கும்போது அந்தக் கட்டணத்தைச் செலுத்த இயலாது.
கட்டணத்துக்கான தொகை, ஓபியு கருவியில் சொருக்கப்பட்டுள்ள பண அட்டையில் இருந்து கழிக்கப்படும்.
இஆர்பி கட்டண பாக்கி வைத்துள்ளோருக்கு ஐந்து நாள் கெடு வழங்கப்படும். அதற்குள் செலுத்தாவிடில் $10 நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு பாக்கிக் கட்டணத்துக்கு கருணை காலம் வழங்கும் முறை 2024 அக்டோபர் 1 முதல் நடப்புக்கு வந்தது.
அதேவேளை, பதிவுபெற்ற வாகன உரிமையாளர்களின் கைப்பேசிக்கு பாக்கித் தொகை குறித்த தகவல் அனுப்பும் முறையை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் தகவலில் சொல்லப்பட்ட ஐந்து நாள்களுக்குப் பின்னரும் இஆர்பி கட்டணத்தைச் செலுத்தாவிடில் அதனைச் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்குக் கடிதம் அனுப்பப்படும். அதில் நிர்வாகக் கட்டணம் பற்றிய அறிவிப்பு இருக்கும்.
ஓபியு கருவியை வாகனங்களில் பொருத்தும் பணியை 2023 நவம்பர் முதல் நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை ஏறத்தாழ 700,000 வாகனங்களில் அந்தக் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
ஜூலை மாதம் இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 1.01 மில்லியன் வாகனங்கள் உள்ளன. எல்லா வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டுக்குள் ஓபியு கருவியைப் பொருத்திவிடலாம் என ஆணையம் எதிர்பார்க்கிறது.