சிங்கப்பூரில் வெவ்வேறு வாகனங்களை ஓட்டி ஏழு சாலை விபத்துகளில் மூவரைக் காயப்படுத்தியவர்மீது புதன்கிழமை (ஜூலை 15) நீதிமன்றத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
31 வயதான டெஸ்மண்ட் லீ சூன் கியாட் எனப்படும் அந்த ஆடவர், 2024 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி வரை அந்த விபத்துகளை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளியில் அறிவிக்கப்படாத போதைப்பொருள் ஒன்றை உட்கொண்டபின் அவர் வாகனங்களை ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பல்வேறு மின்சிகரெட் சாதனங்களை அவர் தன்வசம் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தச் சாதனங்களில் இரண்டு ‘எட்டோமிடேட்’ கலந்த பொருள்களை உள்ளடக்கியதாகும்.
போக்குவரத்துக் குற்றம் தவிர இதர குற்றச்செயல்களிலும் அவர் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அதன்படி, அவரது முதல் குற்றச்செயல் 2024 அக்டோபர் 8ல் தொடங்கியது. அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் காம்பஸ்வேல் கிரசென்டில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து பெண் ஒருவரின் முகத்தில் அவர் இருமுறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே நாள் காலை பின்னேரத்தில் இரு காவல்துறை அதிகாரிகளிடம் வேண்டுமென்றே தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு அவர்களில் ஒருவர்மீது காரி உமிழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

