சிங்கப்பூரில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கடற்கரைகள் ஏழும் ‘நன்று’ எனும் தரநிலையைப் பெற்றிருப்பதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.
சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட் பார்க், பாசிர் ரிஸ், பொங்கோல், சிலேத்தார் தீவு, செம்பவாங் பார்க், செந்தோசாத் தீவு ஆகியன அவை.
கடந்த 2024ஆம் ஆண்டு முதல் ‘சுமார்’ எனத் தரநிலைப்படுத்தப்பட்ட செம்பவாங் பார்க் கடற்கரையும் இப்போது ‘நன்று’ எனும் தரநிலையைப் பெற்றுள்ளது.
எனவே, அங்கே நீச்சல் உள்ளிட்ட நீர் விளையாட்டு நடவடிக்கைகளை இனி மேற்கொள்ளலாம் என்று வாரியம் வியாழக்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.
பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான கடற்கரைகள் உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் தரநிலைப்படுத்தப்படுவதாக வாரியம் சொன்னது.
கரையோரப் பகுதியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் ‘என்டெரோகாக்கஸ்’ (Enterococcus) எனும் பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்த சம்பவங்கள் அதில் கணக்கில் கொள்ளப்படும். அந்த பாக்டீரியா இரைப்பை, குடல் அழற்சியை ஏற்படுத்த வல்லது.
சிலநேரங்களில் கடல்நீரில் அந்த பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கடற்கரைக்குச் செல்வோர் அங்குள்ள நீரின் தரம் குறித்த குறுகியகாலத் தகவல்களைச் சரிபார்த்த பின்னர் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வாரியம் கேட்டுக்கொண்டது.
வாரியத்தின் இணையத்தளத்திலும் ‘மைஇஎன்வி’ (myENV) செயலியிலும் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கழிவு நிலையங்கள், உணவுக்கடைகள், கட்டுமானத் தலங்கள் போன்றவற்றிலிருந்து ‘என்டெரோகாக்கஸ்’ பாக்டீரியா சிங்கப்பூரின் நீர்ப்பரப்பைச் சென்றடைகிறது.
கழிவுநீரைப் பொதுச் சாக்கடையில் விடுதல் போன்ற முறையற்ற கழிவு நிர்வாக நடைமுறைகளாலும் முறை தவறிய சுகாதாரம் பேணும் நடவடிக்கைகளாலும் சிங்கப்பூர் நீர்நிலைகளில் நீரின் தரம் பாதிக்கப்படும் என்று வாரியம் குறிப்பிட்டது.
அரசாங்க அமைப்புகள் சோதனைகளை அதிகப்படுத்தியதுடன் இந்த பாக்டீரியாவின் அளவு குறைவாக இருப்பதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அது தெரிவித்தது.
பொழுதுபோக்குக் கடற்கரைகளுக்கான அடுத்தகட்ட தரநிலைச் சோதனை, வரும் ஜூலை மாதம் இடம்பெறும்.

