சிலேத்தாரில் மீட்கப்பட்ட ஏழு முயல் குட்டிகள் உயிரிழந்தன

சிலேத்தாரில் மீட்கப்பட்ட ஏழு முயல் குட்டிகள் உயிரிழந்தன

கோப்புப் படம்: ESSICA KWOK, VFA_ORG_SG/INSTAGRAM

26 Sep 2026 - 8:21 pm

2 mins read

சிங்கப்பூரின் சிலேத்தார் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 23 முயல்களில் ஏழு குட்டிகள் உயிரிழந்துவிட்டதாக ‘வாய்ஸ் ஃபார் அனிமல்ஸ்’ (விஎஃப்ஏ) என்ற விலங்குநல அமைப்பு சனிக்கிழமை அன்று (செப்டம்பர் 25) தெரிவித்தது.

செப்டம்பர் 18ஆம் தேதி மீட்கப்பட்ட முயல் குட்டிகளுக்குத் தேவையான கதகதப்பு, பராமரிப்பு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இருந்தாலும் முயல் குட்டிகளின் நிலைமை படிப்படியாக மோசமடைந்து காப்பாற்ற முடியாமல் போனது என்று அந்த அமைப்பின் தலைவரான டெரிக் டான் குறிப்பிட்டார்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் என அவை ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கியது வருத்தமளித்தது என்று கூறிய அவர் அங்கிருந்து மீட்கப்பட்ட 16 வளர்ந்த முயல்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்தார்.

வளர்ந்த பெண் முயல்களில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. அவற்றில் இரண்டு குட்டிகள் இதயத் துடிப்பின்றி பிறந்ததாகவும் அவர் சொன்னார்.

புதிதாகப் பிறந்த கடைசி முயல் குட்டி செப்டம்பர் 26 நிலவரப்படி உயிரோடு இருந்தது.

இம்மாதம் 18ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் ‘சிலேத்தார் ஃபார்ம்வே 1’ பகுதியில் அதிக எண்ணிக்கையில் முயல்கள் சுற்றித் திரிவதைக் கண்டதாக நண்பர் ஒருவர் கூறியதால் தமது குழுவினருடன் திரு டான் அங்குச் சென்றார்.

அப்போது கைவிடப்பட்ட பல முயல்கள் அங்கு இருப்பதை அவர் கவனித்தார். அவரது நண்பர் ஏற்கெனவே சம்பவ இடத்திற்கு வந்து சில முயல்களை மீட்டிருந்தார்.

கைவிடப்பட்ட கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த ஏழு குட்டி முயல்கள், மூன்று வளர்ந்த பெண் முயல்கள் உட்பட அனைத்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

தற்போது எஞ்சியுள்ள 17 முயல்களுக்கு புதிய வாழ்விடங்களை வழங்க விலங்குநல அமைப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்