சாலையோரத்தில் அமர்ந்து பியர் குடித்த ஒருவரை, இரவு 10.30 மணிக்கு மேல் இருந்ததால், அந்த பானத்தைத் தூக்கி எறியும்படி இரண்டு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் 28 வயதான சூ பிவெய், அவரை தனியாக விட்டுவிடச் சொல்ல காவல்துறை அதிகாரிகளுக்கு $89 லஞ்சம் கொடுக்க முயன்றார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றத்தை அந்தச் சீன நாட்டவர் செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அவருக்கு ஏழு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி இரவு 11 மணிக்கு சூ, ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள அங்குலியா பார்க் பொது கார் நிறுத்துமிடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
மற்றொரு சம்பவத்தின் தொடர்பில் உதவி கேட்டு வந்த அழைப்பை ஏற்று அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் இருவர் சூவைப் பார்த்து, அவரை அணுகினர்.
சூ அருந்திக்கொண்டிருந்த பீரை கீழே கொட்டிவிட்டு டின்னை வீசச் சொன்னார்கள். ஆனால், சூ அவர்களுக்கு $89 லஞ்சம் கொடுத்தார். அதை நிராகரித்த அதிகாரிகள், காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுப்பது குற்றம் என எச்சரித்தனர்.
ஆனால், 30 நிமிடங்கள் நீடித்த அச்சம்பவத்தில் மேலும் ஐந்து முறை அவர்களிடம் பணத்தை நீட்டினார் என்று தெரிவிக்கப்பட்டது.
லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்தை தான் ஒப்புக்கொள்ளப் போவதாக 2023 நவம்பரில் தெரிவித்த சூ, பின்னர் கடந்த ஜூலை 10ஆம் தேதி தமது குற்றத்தை எதிர்த்து வழக்கைச் சந்திக்க தயார் என்று கூறினார். ஆனால், ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது முடிவை மாற்றிக்கொண்ட சூ, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு $10,000 வரையிலான அபராதம், ஐந்து ஆண்டு வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.


