சிங்கப்பூரில் கடுமையான புகைமூட்டம் நீடிக்கிறது. குறிப்பாக, மேற்கு வட்டாரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வியாழக்கிழமை (அக்டோபர் 15) காலை 8 மணி நிலவரப்படி மேற்கு வட்டாரத்தில் பதிவான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 207ஆக இருந்தது.
பின்னிரவு 1 மணியிலிருந்து 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்தக் குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டது.
மத்திய வட்டாரத்தில் 184, கிழக்கில் 170, தெற்கில் 157, வடக்கில் 125 எனக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு தொடர்ந்து மோசமாகவே நீடிக்கிறது.
24 மணிநேரக் குறியீடு அக்டோபர் 14ஆம் தேதி இரவு 9 மணியளவில் முதன்முறையாக ஆரோக்கியமற்ற நிலையைக் கடந்தது.
அது 203ஆகப் பதிவாகி தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.
புகைமூட்டம் மோசமடைந்துவரும் நிலையில், முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்தது.
சமூக மன்றங்கள், குடியிருப்புக் குழுக்கள், குடியிருப்பாளர் நிலையங்கள் என 300க்கும் அதிகமான இடங்களில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகள் புகைமூட்டத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ரா ஆகிய பகுதிகளிலிருந்து அடர்த்தியான புகை சிங்கப்பூரை நோக்கி நகரும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்தது.
