இந்தோனீசியத் தீச்சம்பவங்களால் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான புகைமூட்டம்

இந்தோனீசியத் தீச்சம்பவங்களால் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான புகைமூட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Oct 2026 - 1:14 pm

3 mins read

சிங்கப்பூர்: இந்தோனீசியாவில் ஏற்படும் தீச்சம்பவங்களால் தென்கிழக்கு ஆசியா மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைச் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் வானிலை, பருவநிலை அமைப்பு சனிக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது.

காற்றின் திசை மாறி, அப்பகுதியில் மழை பெய்து, தீ அணையும் வரை இந்த நெருக்கடி நிலை பல வாரங்கள் அல்லது பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என்று அந்த அமைப்பின் ஆசிய, பசிபிக் வட்டார அலுவலகத்தின் இயக்குநரான பென் சர்ச்சில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் டாய் செங்கில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த சர்ச்சில், தற்போது நிலவிவரும் எல் நினோ வானிலை மாற்றம் இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்றார்.

நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள ஆசியான் வட்டாரத்தில் வறண்ட, வெப்பமான வானிலையைக் கொண்டுவரும் இந்த வானிலை நிகழ்வின் தொடக்கம், இப்பகுதியின் வறண்ட பருவநிலையுடன் இணைந்து வந்துள்ளது.

இது, தீ தொடர்ந்து நீடிப்பதற்கும் பரவுவதற்கும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது என்று சர்ச்சில் கூறினார்.

பாரம்பரிய முறையில் விளைச்சல் நிலத்தை எரித்துச் சுத்தப்படுத்தும் முறையால் காட்டுத் தீ மேலும் பரவுகிறது.

“ஆரோக்கியமற்ற நாள்களும் நேரங்களும் படிப்படியாக அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது மேலும் தொடரும் என்பதே எனது எதிர்பார்ப்பு,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக 13 நாள்கள் காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடு (பிஎஸ்ஐ) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. இது, 2015ஆம் ஆண்டின் புகைமூட்ட நெருக்கடிக்குப் பிறகு நாடு சந்தித்துள்ள மிக நீண்ட, தொடர்ச்சியான பாதிப்பாகும்.

சிங்கப்பூரின் ஏதேனும் ஒரு பகுதியில் நாளின் எந்தவொரு நேரத்திலாவது பிஎஸ்ஐ அளவு 100ஐத் தாண்டினால் அந்த நாளின் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரான கிரேஸ் ஃபூ, நீண்ட புகைமூட்டமான சூழலுக்குச் சிங்கப்பூர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இங்குள்ள காற்றின் தரம் ஆபத்தான நிலையைக்கூட எட்டக்கூடும் என்றும் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து சர்ச்சிலின் கருத்து வெளியாகியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்து, அதன் திசை மாறும்போது மட்டுமே சூழ்நிலை சீரடையக்கூடும் என்று கூறிய அமைச்சர் கிரேஸ் ஃபூ, அது நடக்க இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என்றார்.

தற்போது தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று, ஆண்டின் இறுதியில் வடக்குத் திசையிலிருந்து வீசத் தொடங்கும்போது, சிங்கப்பூரில் புகைமூட்டப் பிரச்சினை குறையும். அப்போது சற்று நிவாரணம் கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 8 முதல் ஏழு நாள்களில் உலகின் புகைமூட்டப் பிரச்சினைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தோனீசியாவிலிருந்தே உருவாகியுள்ளன என்று சர்ச்சில் கூறினார்.

செயற்கைக்கோள் தரவு, பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி பூமியைக் கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிக்கஸ் திட்டத்தால் இயக்கப்படும் ‘ஃபயர் எமிஷன்ஸ் வாட்ச்’ சேவையின் தரவுகளை அவர் மேற்கோள் காட்டினார்.

முன்னெச்சரிக்கை, முன்னறிவிப்பு குறித்த வட்டார ஒத்துழைப்பு, மக்கள் தங்களைச் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என்று சர்ச்சில் வலியுறுத்தினார்.

தீயைக் கட்டுப்படுத்தவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் வட்டாரத்தில் உள்ள நாடுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆசியான் நாடுகள் தங்களின் தீயணைப்பு வளங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்புகைமூட்டம்இந்தோனீசியாகாட்டுத் தீஐநாவானிலைகிரேஸ் ஃபூ