மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று அரசு நீதிமன்றங்களின் நீதிபதி ஒருவர் கோடிகாட்டியிருக்கிறார்.
மின்சிகரெட் விவகாரம் குறித்துப் பொதுமக்கள் அக்கறை தெரிவித்துவரும் நிலையில் நீதிபதியின் கருத்து வந்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் ஒருவர் 5 மின்சிகரெட் சாதனங்களை வாங்க உதவியதாக நிக்கோல் லொரெய்ன் ரோட்ரிகெஸ் எனும் பெண் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வோங் லி தெய்ன், தண்டனையைக் கடுமையாக்கும் சாத்தியம் இருப்பதாகச் சொன்னார்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஒருவர், ஏற்கெனவே அந்தப் பெண்ணுக்கு நீதிமன்ற விசாரணை குறித்து இரண்டு முறை நினைவூட்டப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அதிகாரிகளால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார் வழக்கறிஞர்.
நீதிமன்றத்திற்கு வராததைத் தொடர்ந்து நிக்கோலுக்குக் கைதாணை பிறப்பிக்கும்படி வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தாலும் வழக்கு விசாரணையைப் பின்னொரு தேதிக்குத் தாம் தள்ளிப்போட்டிருக்கக்கூடும் என்றார் நீதிபதி.
தீர்ப்புக்கான வாதங்களை மீண்டும் ஆராய வழக்கறிஞருக்குக் கூடுதல் அவகாசம் கிடைக்க அது வழிவிடும்.
“மின்சிகரெட் தொடர்பான வழக்குகள் பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. அதனால் முன்னைய வழக்குகளின் முடிவுகளை இனி சார்ந்திருக்க முடியாது,” என்று நீதிபதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டின் மின்சிகரெட் வழக்குகளும் தற்போது விசாரிக்கப்படும் அதே போன்ற வழக்குகளும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டா என்று அவர் குறிப்பிட்டார்.
கேபோட்ஸ் தோய்ந்த மின்சிகரெட் மட்டுமின்றி மின்சிகரெட் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் கடும் தண்டனை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார் நீதிபதி.
தீர்ப்புக்காகத் தற்போது முன்வைக்கப்படுகின்ற வாதங்களின் மூலம் விதிக்கப்படும் சிறைத்தண்டனை அல்லது அபராதம் குறைவாகத்தான் இருக்கும் என்று அவர் சொன்னார். அதனால் மக்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு தீர்ப்பு விதிக்கப்படவேண்டும் என்றார் நீதிபதி வோங்.

