வானிலைச் சூழலைக் கண்டறியத் தவறிய எஸ்கியூ321 விமான ரேடார்: அறிக்கை

2024ல் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளான எஸ்ஐஏ விமானம்

வானிலைச் சூழலைக் கண்டறியத் தவறிய எஸ்கியூ321 விமான ரேடார்: அறிக்கை

3 mins read
66e915eb-4e53-4f86-a0d6-be8da3bcf485
எஸ்கியூ321 விமானம் ஆட்டங்கண்ட சம்பவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஈராண்டுகள் கழித்து இந்த இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கடந்த 2024ல் லண்டன்-சிங்கப்பூர் எஸ்கியூ321 விமானம் நடுவானில் திடீரென ஆட்டங்கண்டதற்கு, விமானத்தின் ரேடார் வானிலை நிலவரத்தைக் கண்டறியாததே காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம், விமானியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வானிலைச் சூழலைக் கவனித்த விமானிகளுக்கு வானில் மேகங்கள் தென்படவில்லை என்று செவ்வாய்க்கிழமை (மே 19) போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு வெளியிட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மே 21ஆம் தேதி, மொத்தம் 229 பேர் சென்ற அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஆட்டங்கண்டதில் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன் 79 பேர் காயமடைந்தனர்.

இருப்பினும், ரேடாரில் கோளாறு இருந்ததா என்பது குறித்து உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலைச் சூழலைக் கண்டறிந்து, விமானி அறைத் திரையில் அதைக் காட்டுவதில் ரேடார் தோல்வியடைந்ததற்கான எந்த ஆதாரமும் அதன் உற்பத்தியாளர் நடத்திய சோதனைகளில் கிடைக்கவில்லை. ஆயினும், ரேடார் தோல்வியடைந்ததற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டியது.

சம்பவத்திற்கு ஆறு நாள்களுக்கு முன்பும் இதே விமானத்தின் ரேடார், வானிலை நிலவரத்தைக் காட்டத் தவறியது, அதன் பராமரிப்புப் பதிவேடுகளில் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை மேற்கோள் காட்டியது.

பேங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானத்தைச் சிங்கப்பூருக்கு இயக்கிய விமானிகளும், வானிலை நிலவரத்தை ரேடார் குறைத்து மதிப்பிட்டுக் காட்டுவதற்கான அறிகுறிகளைக் கவனித்தனர்.

அந்த போயிங் 777-300இஆர் விமானம், தென்மேற்கு மியன்மாருக்கு மேலே 37,000 அடி உயரத்தில் மணிக்கு ஏறக்குறைய 1,037 கி.மீ. வேகத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஆட்டங்கண்டது.

நிலைமையை உணர்ந்த விமானிகள், உடனடியாக வேகத்தைக் குறைத்து இருக்கைவார் சமிக்ஞையை ஒளிரச் செய்தபோதும், பயணிகளுக்கு அறிவிப்பு வழங்க நேரம் கிடைக்கவில்லை.

அடுத்த சில வினாடிகளில் விமானம் திடீரென ஏறி இறங்கியதால், இருக்கைவார் அணியாதவர்கள் இருக்கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து, விமானிகள் விமானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

“எப்படித் திடீரென இவ்வாறு நிகழ்ந்தது? இதை (பக்கவாட்டுச் சன்னலில் உள்ள தடுப்பை) அகற்றிப் பார்க்கிறேன்,” என்று முதன்மை விமானி கேட்பது விமானி அறைக் குரல் பதிவுப்பெட்டியில் பதிவாகியிருந்தது.

அடுத்தடுத்த நிமிடங்களில் பதிவான உரையாடல்கள், பயணம் முழுவதும் விமானி தமது ரேடாரை அதிகபட்ச உணர்திறனில் அமைத்திருந்ததைக் காட்டுகின்றன.

அது இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்போது, ரேடார் கண்டறியும் மழையின் அளவைப் பெருக்கிக் காட்டும். உதாரணமாக, குறைவான மழைப்பொழிவு, விமான அறையின் திசைக்காட்டித் திரையில் பொதுவாகப் பச்சை நிறத்தில் தெரியும். ஆனால், ரேடார் அதிகபட்ச உணர்திறனில் அமைக்கப்படும்போது, மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றி அது அதிகத் தீவிரத்தைக் குறிக்கலாம்.

மோசமான வானிலையைக் கடப்பதற்கான சிறந்த பாதையைத் தீர்மானிக்க இது விமானிகளுக்கு உதவுகிறது.

எனினும், விமானம் ஆட்டங்கண்டபோது, ரேடாரில் இதுபோன்ற எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தின்போது, விமானப் பணியாளர்களின் நடவடிக்கைகள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும், சூழ்நிலைக்குப் பொருத்தமான வகையிலும் அமைந்திருந்தன என்று விசாரணைப் பிரிவு கூறியது.

ரேடாரைச் சார்ந்திருக்காவிட்டாலும், அங்கு சூழ்ந்திருந்த மேகங்களை விமானிகளால் ஏன் கவனிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில் அப்பகுதியில் பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்களில் மூன்று, தெளிவான வானிலையில் சென்றபோதிலும், அங்கிருந்த மேகமூட்டத்தைக் கவனித்து மோசமான வானிலையைத் தவிர்க்க தங்களது சொந்த ரேடார்களைப் பயன்படுத்தி மாற்றுப் பாதையில் சென்றன.

இந்த விமானங்கள் பயன்படுத்திய ரேடார்கள், எஸ்கியூ321 விமானத்தின் ரேடார் வகையிலிருந்து வேறுபட்டவை.

போயிங் 777 விமானங்களில் இதுபோன்று பலமுறை ரேடாரில் கோளாறு ஏற்பட்டுள்ள வேளையில், ஆட்டங்கண்ட இதே விமானத்தில் மட்டும் 2024 ஏப்ரல், மே மாதங்களில் மூன்று முறை இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரேடார் பழுதடையும்போது அதுகுறித்த அறிகுறி திரையில் தென்படாது என்பதால், விமானிகள் ரேடார் காட்டும் தகவல்களை வெளிச் சூழலோடு உன்னிப்பாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும் என விசாரணைப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ‘எஸ்கியூ321’ விமானம் கடுமையான கொந்தளிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்து 79 பேர் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ‘எஸ்கியூ321’ விமானம் கடுமையான கொந்தளிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்து 79 பேர் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்நிலையில், பாதுகாப்புப் பரிந்துரைகளை அது முன்வைத்துள்ளது.

27,000 கிலோவுக்குமேல் எடை கொண்ட, 2023க்குமுன் சான்றளிக்கப்பட்ட அனைத்து விமானங்களிலும் திரைப் பதிவுச் செயல்பாட்டைக் கட்டாயமாக்க அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரேடார் பழுதுகளைக் கண்டறியப் போயிங் நிறுவனம் வழிகாட்ட வேண்டும் எனவும், ரேடார் திரைகளைப் பதிவுசெய்யும் வசதியை உற்பத்தியாளர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காற்றுக் கொந்தளிப்பைக் கண்காணிக்கும் கருவிகளை மேம்படுத்துவது, ரேடார் பழுதுகளைக் கையாள்வது குறித்து விமானப் பணியாளர்களுக்கு வழிகாட்டுவது, இதுகுறித்த அறிக்கைகளை உற்பத்தியாளர்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எஸ்ஐஏ உடனடியாக மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்