வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவு: இளையருக்கு ஏப்ரல் 22ல் தண்டனை

வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவு: இளையருக்கு ஏப்ரல் 22ல் தண்டனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Feb 2026 - 12:53 pm

2 mins read

பதின்ம வயது ஆடவர் ஒருவர் 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே 13, 14 வயதான இரண்டு சிறுமிகளை வெவ்வேறு தருணங்களில் சந்தித்து, அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 19 வயது பூர்த்தியான அந்த இளையர், வயது குறைவான சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது, அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

குற்றச்செயல்களில் சிலவற்றை 18 வயதுக்குக்கீழ் இருந்தபோது புரிந்ததால், அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

2022 ஏப்ரல் 14ஆம் தேதி, உட்லண்ட்சில் உள்ள புளோக் ஒன்றின் மாடிப்படியில் அந்த இளையர் 13 வயதுச் சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

பொதுமக்களில் ஒருவர் அவர்களைக் கண்டு, காவல்துறையை அழைத்தார். இருப்பினும், விசாரணை நடந்துகொண்டிருந்த வேளையில், அந்த இளையர் மீண்டும் குற்றம் புரிந்தார்.

2023 பிப்ரவரியில், அவர் டெலிகிராமில் இரண்டாவது சிறுமியைத் தொடர்புகொண்டார். அந்தச் சிறுமியுடன் அவர் இருமுறை பாலியல் உறவில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி காவல்துறையிடம் புகார் அளித்தார். இருப்பினும், அவர் புகார் செய்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

2023 ஜூலை 13ஆம் தேதி, காணொளி ஒன்று குறித்துக் கேள்விகேட்க, 14 வயதான மற்றொரு சிறுவனின் பள்ளிக்கூடத்திற்குள் அந்த இளையர் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர், அந்தச் சிறுவனை அறைந்து, அந்தப் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேற முயன்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நிறுத்தினர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப, நன்னடத்தை உத்தரவுக்கும் சீர்திருத்தப் பயிற்சிக்கும் அந்த இளையர் தகுதியானவரா என்பதை மதிப்பிடும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி கேரல் லிங் கோரினார்.

அந்த இளையரை ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவருக்கு ஏப்ரல் 22ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்