பாலர் பள்ளியில் வேலை பார்த்த முன்னாள் சமையல்காரருக்கு மூன்று பெண் குழந்தைகளை மானபங்கப்படுத்தியதற்காக திங்கட்கிழமை அன்று (நவம்பர் 10) ஒன்பது ஆண்டு, நான்கு மாதம், ஏழு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இது, உள்ளூரில் நடைபெற்ற மிக மோசமான பாலியல் வழக்குகளில் ஒனறு என்று அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
மலேசியரான டியோ குவான் ஹுவாட், 61, மீது கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும், இதர ஐந்து மானபங்கக் குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
“டியோவின் செயல் வெறுக்கத்தக்க, நம்பிக்கை துரோகத்தைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்கள்,” என்று மாவட்ட நீதிபதி வின்ஸ் குய் தனது தீர்ப்பின்போது தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான டியோ, பள்ளியில் குழந்தைகள் தூங்கும் அறையில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான மூன்று சிறுமிகளை மானபங்கப்படுத்தியிருக்கிறார்.
2023ஆம் ஆண்டின் மே முதல் நவம்பர் மாதம் வரையிலான பாலியல் சம்பவங்களில், குழந்தைகள் அணிந்திருந்த டயாப்பருக்குள் அவர் தனது கையை நுழைத்து மானபங்கப்படுத்தினார்.
அவரது இழிவான செயல் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, ஓராண்டு காலமே அந்தப் பள்ளியில் பணியாற்றிய டியோ 2023 நவம்பரில் வேலையிலிருந்து விலகினார்.
தொடர்புடைய செய்திகள்
டியோ சமையல்காரராகப் பணியாற்றினாலும், குழந்தைகளைக் குளிப்பதற்கு அழைத்துச் செல்வார், உறங்குவதற்கு படுக்கை விரிப்புகளைப் போட்டு தூங்க வைப்பார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேசத் தெரியாது என்பதால் குழந்தைகளைக் குறி வைத்து பாலியல் செயலில் ஈடுபட்டதாக டியோ கூறியுள்ளார்.
மனநலக் கழகத்தின் அறிக்கை ஒன்று, டியோவுக்கு பெடோபிலிக் (Paedophilic Disorder) என்ற பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது.
இது, ஒருவர், இளம் பருவத்தினரிடம் பாலியல் ஈர்ப்புக்கு உள்ளாகும் மனநிலையாகும்.
2023 நவம்பர் 16ஆம் தேதி பள்ளியின் ஊழியர் ஒருவர் கண்காணிப்புக் கேமராவில் டியோவின் மானபங்கச் செயலைப் பார்த்ததைத் தொடர்ந்து அவரது குற்றச்செயல்கள் தெரிய வந்தன. இதையடுத்து பள்ளி நிர்வாகக் குழுவினர், 2023 நவம்பர் 23ஆம் தேதி அவரை வேலையிலிருந்து விலக உத்தரவிட்டனர்.

