சிங்கப்பூரில் இரண்டு பதின்ம வயது பெண்களிடம் பாலியல் ரீதியான சுரண்டலில் ஈடுபட்டதாக நம்பப்படும் எட்டு ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 20லிருந்து 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
சம்பவம் தொடர்பில் 20 வயதுப் பெண் ஒருவர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் பெண், இரண்டு 16 வயதுப் பெண்களைப் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் பணம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பதின்ம வயதுப் பெண்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் 23 வயது முகம்மது ஹசிக் பகாடியார், 24 வயது இர்ஹாம் ஹுசைனி முகம்மது ஹுசைன், 26 வயது ஷாஹிருல் டாவுட் அப்துல் ரசாக், 27 வயது முகம்மது அமீருலா நூர் முகம்மது, 34 வயது வில்ஃப்ரெட் ஆங் ஷுய் லாய், 36 வயது முகம்மது இங்காசிரி செங்காரி, 38 வயது முகம்மது ஐசாட் காலிஸ் டாவுட், 41 வயது ஃபசால் ஹனாஃபி ஹமீது சௌத்ரி ஆகிய எட்டு ஆடவர்களும் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
பாலியல் ரீதியான உறவுக்காக எட்டு ஆடவர்களும் $50யிலிருந்து $300 வரையிலான தொகையைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடுக்குமாடிக் கட்டடத்தின் படிக்கட்டுகள், உடற்குறையுள்ளோருக்கான கழிவறை, கார் ஆகியவற்றில் அவர்கள் பதின்ம வயதுப் பெண்ணுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காகப் பதின்ம வயதுப் பெண்ணில் ஒருவரைக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் பணியமர்த்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பதின்ம வயதினர் மேற்கொண்ட பாலியல் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பணத்தைக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண் கிட்டத்தட்ட $1,435 பெற்றதாகத் தெரிகிறது.
தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருப்பதாகக் கூறிய பெண், வழக்கறிஞர் சேவையை நாட விரும்பவில்லை என்றார்.
செப்டம்பர் 14ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

