சிங்கப்பூரில் 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த 26 வயது பேருந்து ஓட்டுநருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துப் பயணத்தின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் பலமுறை பாலுறவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
சிறுமியின் தனிநபர் அடையாளத்தைக் காக்கும் விதமாகக் குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆடவர் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தற்போது 30 வயதாகும் அந்த ஆடவர் 2021ஆம் ஆண்டில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பேருந்தை இயக்கி வந்தார்.
2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் குற்றச் செயல்கள் தொடங்கின.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுமி தமக்கு நடந்ததை அவர் உறவினரிடம் சொன்னார். அதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படும்.