உள்ளூர் யூடியூப் ‘வா! பனானா’ ஒளிவழியில் முன்னாள் திரைக்கதை எழுத்தாளர்-நடிகரும் டிக்டாக் பிரபலமுமான லெவ் பான்ஃபிலோவ், 29, என்பவர்மீது டேட்டிங் செயலியான தின்டரில் தாம் சந்தித்த பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்து.
அக்குற்றத்திற்காக அவருக்கு 11 ஆண்டுகள், ஆறு மாதச் சிறை தண்டனையும் 12 பிரம்படிகளும் திங்கட்கிழமை (மே 19) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட ஒரு மானபங்கக் குற்றச்சாட்டையும் இரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளையும் ஒரு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டையும் அவர் நீதிமன்றத்தில் முன்னர் ஒப்புக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கதை எழுதுவதற்காக அப்பெண்ணை பான்ஃபிலோவ் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, படுக்கை அறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்பட்டது
ரஷ்யாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான பான்ஃபிலோவ், 2021 ஜனவரி 12ஆம் தேதி இரவு ரிவர் வேலி கூட்டுரிமை வீட்டில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அந்த வீட்டை இருவருடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
குற்றச்சம்பவம் நிகழ்ந்தபோது அப்பெண்ணுக்கு வயது 30. நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

