முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், சுற்றுக்காவல் பணிகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தப்போவதாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல் ஒன்றில், இளம் வயதுச் சிறுவன் சம்பந்தப்பட்ட பாலியல் வன்செயல் வழக்கிற்குப் பிறகு, முயிஸ் அந்தக் கருத்தைத் தெரிவித்தது.
குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிவாசல் வளாகங்களில் இளம் வயதினர் சம்பந்தப்பட்ட கடும் பாலியல் குற்றங்களை முயிஸ் வன்மையாகக் கண்டிப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
“நமது பள்ளிவாசல்கள், குறிப்பாக நமது பிள்ளைகளுக்கும் இளையோருக்கும் எப்போதுமே பாதுகாப்பான, நம்பகமான இடங்களாக இருக்கவேண்டும்,” என்றார் அந்தப் பேச்சாளர்.
37 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் பள்ளிவாசலில் சமயப் பாடங்களை நடத்தியபோது, பாட்டியுடன் வளர்ந்த இளம் சகோதரர்கள் இருவரைத் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் மீண்டும் இளைய சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மூத்த சிறுவனையும் மானபங்கப்படுத்தினார்.
அந்த ஆடவருக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) மொத்தம் 27 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும் மானபங்கப்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படும்போது, பல்வேறு பாலியல் குற்றங்கள் தொடர்பான 12 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்த இரு சகோதரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தவிர, தன்னை ஒரு மூத்த சகோதரராகவும் சமய வழிகாட்டியாகவும் கருதிய 17 வயதுச் சிறுவன் உட்பட மூவரை மானபங்கப்படுத்தியதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பெயர் வெளியிடப்படாத அந்த ஆடவரை, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதற்கு முன்பே சமூக ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தனர். மேலும், அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமய ஆசிரியர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குற்றங்களால், அப்போது 6 வயது முதல் 8 வயதுக்கும் 11 வயது முதல் 12 வயதுக்கும் உட்பட்ட அச்சகோதரர்களுக்குத் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்கள் ஏற்பட்டன.
அத்துடன், ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த அந்தச் சகோதரர்கள் விலகியிருப்பதற்கும் அவை காரணமாக அமைந்தன.
தண்டனை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி குவெக் மீன் லக், அந்த ஆடவரின் குற்றங்கள் முற்றிலும் அருவருக்கத்தக்கவை என்றும் கொடூரமானவையும் என்றும் கூறினார்.


