வயது குறைந்த சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்ததற்காக விசாரிக்கப்பட்டு வந்த ஆடவர் ஒருவர், அந்த விசாரணையில் இருந்தபோதே இணையம் வாயிலாக ஓர் இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் செய்கைகளைத் தூண்டினார்.
செபாஸ்டியன் லை சீ வெங் எனப்படும் அந்த ஆடவருக்கு தற்போது 32 வயது. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுமி வழக்கில் அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதனால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலிருந்து காணொளி வாயிலாக நட்புகொண்டிருந்த இளம்பெண்ணிடம் அவர் தொடர்புகொள்ள இயலாமல் போனது.
விடுதலையாகி வெளியில் வந்த அவருக்குத் தண்டனைக் குறைப்பு ஆணை வழங்கப்பட்டது. அதன்படி 2021ஆம் ஆண்டு மார்ச் 20 முதல் ஜூன் 13 வரை அவர் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் தம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆயினும் அமெரிக்கப் பெண்ணுடன் காணொளித் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி, பாலியல் செய்கையில் ஈடுபடுமாறு அவரிடம் கேட்டார் ஆடவர். அதற்கு அந்தப் பெண் இணங்கினார்.
2022 ஏப்ரல் மாதம் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்டபோது குழந்தைகள் சம்பந்தப்பட்ட 12,755 பாலியல் படக்கோப்புகள் அவர்வசம் இருந்ததைக் கண்டனர்.
அவரது குற்றங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 5) 11 மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் அவருக்குத் தண்டனைகளாக விதிக்கப்பட்டன.
தண்டனைக் குறைப்பு ஆணையை மீறிய குற்றத்திற்காக அவர் கூடுதலாக 66 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.

