விமானப் பணியாளருக்குப் பாலியல் தொல்லை; இந்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

விமானப் பணியாளருக்குப் பாலியல் தொல்லை; இந்திய ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
e89aad97-0295-4e94-9fdc-72a8acc90fca
சம்பவம் குறித்துத் தங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:27 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.  - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

விமானப் பயணத்தின்போது பெண் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பெண் பணியாளர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய ஆடவர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:27 மணிக்குத் தகவல் கிடைத்ததாகத் திங்கட்கிழமை (மார்ச் 16) காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் பணியாளர், குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் திவாரி, 36, என்ற அந்த ஆடவரின் இருக்கைக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஆகாஷ் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஆகாஷை எச்சரித்துவிட்டு, விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அந்தப் பணியாளர் சென்றார். ஆனால், ஆகாஷ் அவரைப் பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து, தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆகாஷின் செயல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தமது மேற்பார்வையாளரிடம் புகார் அளித்த பின்னரே, அவர் மீண்டும் தனது இருக்கைக்குத் திரும்பியதாகச் சொல்லப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் சம்பவம் குறித்து சாங்கி விமான நிலையக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலேயே ஆகாஷ் கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட முடியாத வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானம்குற்றம்தண்டனை