சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தெரிவித்த கருத்துகள் கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சட்ட அமைச்சர் கா. சண்முகம், அவரது கருத்து சிங்கப்பூரின் நடைமுறைகளைப் பற்றித் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
‘டிண்டர் டேட்டிங்’ செயலி மூலமாகச் சந்தித்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட லெவ் பான்ஃபிலோவ் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்குத் தொடர்பில் சியா வூன் டெக் மார்ச் 22ஆம் தேதி தமது கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
டிக்டாக் பயனீட்டாளரும் முன்னாள் திரைக்கதை எழுத்தாளர், நடிகரும் உள்ளூர் யூடியூப் நகைச்சுவை ஒளிவழி நடத்துபவருமான லெவ் பான்ஃபிலோவ், பாலியல் வன்கொடுமை, மானபங்கம், பாலியல் சார்ந்த செயல் உள்ளிட்டவற்றில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரும் குற்றவாளியும் முதலில் சந்தித்ததை குறிப்பிட்டு ‘டிண்டர் ஒன்றும் ‘லிங்க்டுஇன்’ தளமல்ல என்பது உட்பட வழக்கு பற்றி பத்து அம்சங்களை சியா தமது பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதே பதிவில், பாதிக்கப்பட்டவருக்கு 30 வயதாகிறது. அவர் காட்டில் உள்ள குழந்தை அல்ல, அந்த மாரத்தான் ஓட்டத்தில் அவர் விழித்திருந்தாரா என்று பாலியல் வன்கொடுமையைக் குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
திரு சியாவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர், வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், திரு சியாவின் கருத்துகளைப் படித்த பிறகு தமக்கு ஆச்சரியமாக இருந்ததாக அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார். சியாவின் கருத்து, பாதிக்கப்பட்டவரை நம்பக்கூடாது என்ற யோசனை கூறுவதுபோல இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் அவரது கருத்து பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று தாம் கவலைப்படுவதாக மார்ச் 24ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.
திரு சியா தெரிவித்துள்ள கருத்துகளிலிருந்து தாம் மாறுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள சட்டத்திலும் காவல்துறை மேற்கொள்ளும் விசாரணை நடைமுறைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஏற்கெனவே தெரிவித்துள்ளதாகக் கூறிய திரு சண்முகம், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை சிறந்த வகையில் பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை விசாரிக்கும்போது அந்தப் பெண் பொதுவாக ஒழுக்கக்கேடானவர் என்பது குறித்து கேள்வி கேட்பதை அனுமதிக்கும் சாட்சிய சட்டப்பிரிவு 2012ல் நீக்கப்பட்டது அவற்றில் அடங்கும்.