உள்துறைக்குழு வளாகத்தில் பாலியல் குற்றம்: மூவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
791595ea-ff3d-41c1-827e-3587ab87d605
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உள்துறைக் குழு (ஹோம் டீம்) வளாகம் ஒன்றில் பாலியல் குற்றம் புரிந்ததாக மூன்று ஆடவர்கள்மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்த ஆடவர்கள், குற்றம் நடந்த இடங்கள் ஆகிய விவரங்கள் காவல்துறையால் வெளியிடப்படவில்லை.

பாலியல் குற்றம் நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தபின்பு அந்த மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றவாளிகளில் 25 வயது சிங்கப்பூரரும் 23, 24 வயதுடைய இரண்டு நிரந்தரவாசிகளும் அடங்குவர்.

வெளிநாட்டைச் சேர்ந்த அந்த இரு நிரந்தரவாசிகளும் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். சிங்கப்பூர் ஆடவர்மீது பாலியல் குற்றங்கள், தொந்தரவு விளைவித்தல் உள்பட எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அந்த மூவரும் ஒருவரை இரண்டு தனித்தனி சம்பவங்களில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். பிறகு அதே ஆண்டு அக்டோபர் மாதம், அந்த ஆடவர் மீண்டும் பாலியல் ரீதியாக குறிப்பிடப்பட்ட சிங்கப்பூரரால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு ஆடவரையும் அந்த சிங்கப்பூரர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டுமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதே சிங்கப்பூரர் அந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, மூன்றாம் ஆடவரிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.

மூவரின் வழக்குகள், அடுத்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நீதீமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஒவ்வொரு பாலியல் குற்றத்துக்கும் 3 ஆண்டு சிறை, பிரம்படி அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்