கடந்த 2023ஆம் ஆண்டில் குறைந்த வயதுச் சிறுவனுடன் ஒருமுறைக்குமேல் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாது ஒருவர்மீது 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தச் சிறுவன் அல்லது மற்றவர்களின் விவரங்கள் நாடாளுமன்ற ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டதால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை உறுதிசெய்யமுடியவில்லை.
அந்த 40 வயது மாதின் பெயரையும் வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட பள்ளியின் விவரங்களையும் வெளியிடுவதற்கு அனுமதி இல்லை.
குறைந்த வயதுச் சிறுவனைத் தகாத முறையில் நடந்துகொள்ளச் செய்தது, பாலியல் உறவில் ஈடுபட்டது, நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயலைப் புரிந்தது போன்றவை தொடர்பில் அம்மாதின்மீது மொத்தம் 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஒரு சிறுவன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அந்தச் சிறுவன் 16 வயதுக்கும் குறைவானவர்.
கடந்த 2023 மார்ச் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே, நிர்வாணப் படங்களை அனுப்பும்படி அச்சிறுவனிடம் அந்த மாது கேட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு அந்தச் சிறுவன் இணங்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த மாதுக்கான வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும்.

