சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ), ஏறக்குறைய 16 பூச்சி வகைகளை உட்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜூலை 8ஆம் தேதி கூறியுள்ளது.
வெவ்வேறு சிள்வண்டு வகைகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
‘ஹௌஸ் அஃப் சீஃபுட்’ உணவகத்தின் தலைமை நிர்வாகி ஃபிரான்சிஸ் இங், 30 பூச்சிகள் அடங்கிய உணவு வகைப் பட்டியலைத் தயாரித்துவருகிறார். ஒப்புதல் அளிக்கப்பட்ட 16 பூச்சி வகைகளில், புழுக்கள், சிள்வண்டுகள் ஆகியவற்றை அந்த உணவகம் வழங்கவிருக்கிறது.
ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு முன்னர், அதன் பூச்சி வகை உணவுகளைப் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள உணவகத்திற்கு அன்றாடம் ஐந்து முதல் ஆறு அழைப்புகள் வரை கிடைக்கும் என்றார் திரு இங்.
“பல வாடிக்கையாளர்கள், குறிப்பாக 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மிகவும் துணிச்சல்மிக்கவர்கள். உணவில் முழு பூச்சியையும் அவர்கள் பார்க்க விரும்புகின்றனர். அதனால் அவர்கள் தேர்ந்தெடுப்பதற்குப் பல தெரிவுகளை நான் வழங்குகிறேன்,” என்று திரு இங் கூறினார்.
பூச்சி உணவு வகைகளின் விற்பனையால், தமது வருமானம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
16 பூச்சிகளை உட்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு பொதுக் கலந்துரையாடல்களைத் தொடங்கியதாக ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் தெரிவித்திருந்தது.
சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தப் பூச்சி வகைகளை உட்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்போவதாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைப்பு கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அந்தக் காலக்கெடு இவ்வாண்டின் முதல் பாதிக்குத் தள்ளிபோடப்பட்டது.
இந்நிலையில், மனிதர்கள் உட்கொள்வதற்கு பூச்சிகளை ஏற்றுமதி செய்யவோ வளர்க்கவோ திட்டமிடுவோர் அமைப்பின் வழிகாட்டி முறைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியுள்ளது.