நாட்டில் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பை முன்னேற்ற சிங்கப்பூர் உணவு அமைப்பு திட்டமிடுகிறது.
தென் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பராமுன்டி நிறுவனம் மட்டுமே மீன் வளர்ப்பு பணியில் இருந்தது. அது தற்போது அங்கிருந்து வெளியேற உள்ளதால் அடுத்த கட்ட திட்டத்தில் சிங்கப்பூர் உணவு அமைப்பு களமிறங்கியுள்ளது.
புலாவ் செனாங், புலாவ் செமாக்காவ் பகுதிகளில் புதிய மீன் பண்ணை நிறுவனங்கள் செயல்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் மீன் பண்ணை தொடர்பாக வேறென்ன கட்டமைப்புகள் உருவாக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பராமுன்டி நிறுவனம் புலாவ் செனாங், புலாவ் செமாக்காவ் நீர் பகுதியில் திறந்தவெளி கடல் கூண்டுகள் மூலம் மீன்களை வளர்த்தன. மேலும் நிலப்பகுதிகளில் மீன் குஞ்சுகள் பொரிக்க ஏதுவான வசதிகளையும் பண்ணைகளையும் அது வைத்திருந்தது.
தென் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் பராமரிப்பு செலவுகள் அதிகமாவதாக பராமுன்டி நிறுவனம் தெரிவித்தது. அதனால் விற்பனைச் சந்தையில் கூடுதல் விலைக்கு மீன்களை விற்க நேரிடுகிறது, மேலும் நீண்ட கால லாபத்தை எதிர்பார்க்க முடியவில்லை, போக்குவரத்து செலவுகளும் அதிகமாக உள்ளதாக அது குறிப்பிட்டது.
இந்த முக்கிய காரணங்களால் தான் சிங்கப்பூரைவிட்டு வெளியேறுவதாகவும் புரூணையில் உள்ள பண்ணையில் மட்டும் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் பராமுன்டி நிறுவனம் குறிப்பிட்டது.
2012ஆம் ஆண்டு முதல் தென் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பராமுன்டி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தற்போது அந்த இடங்களை ‘டிஎச்ஐ வாட்டர் அண்ட் என்விரான்மென்ட்’ எனும் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது சிங்கப்பூர் உணவு அமைப்பு.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிறுவனம் புலாவ் செனாங், புலாவ் செமாக்காவ் பகுதியில் பண்ணைகள் அமைப்பது மூலம் சுற்றுச்சூழலுக்கு அவை என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி ஆராயவுள்ளது.
ஆராய்ச்சி முடிந்த பிறகு அந்தப் பகுதிகள் மீண்டும் பண்ணைகளிடம் குத்தகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆராய்ச்சி முடிவுகளில் சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ள நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

