தாம்சன் பிளாசாவில் உள்ள ‘பீச் கார்டன்’ எனும் சீன உணவகம் மீண்டும் செயல்படுவதற்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அங்கு உணவு உட்கொண்ட பிறகு 58 பேர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தின் உரிமம் கடந்த ஏப்ரலில் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் ஏப்ரல் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட பிறகு, 58 பேருக்கு இரைப்பைக் குடலழற்சி ஏற்பட்டது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சுகாதார அமைச்சும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவர் வீடு திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஏப்ரல் 22ஆம் தேதியிலிருந்து தற்காலிமாகச் செயல்பாடுகளை நிறுத்தும்படி, சிங்கப்பூர் உணவு அமைப்பு அந்த உணவகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அந்தத் தற்காலிகத் தடை மே 20ஆம் தேதி அகற்றப்பட்டது.