சுத்தம் செய்யும் பணிக்காக உணவு நிலையம் மூடல்

1 mins read
77d98f35-09d3-4f10-9c7f-895728bdbe32
டேங்ஸ் சந்தையில் இருக்கும் ஓர் உணவகத்தின் மேசையிலிருந்த உணவுத்தட்டில் இரண்டு உணவுக் கிண்ணங்களுக்கு அருகில் எலி ஒன்று இருந்ததைக் காணொளி காட்டியது. - காணொளிப்படம்: சியாஹாங்ஷூ

சுத்தம் செய்யும் பணிக்காக டேங்ஸ் சந்தை அதன் உணவுநிலையத்தை நவம்பர் 30ஆம் தேதி மூடுவதாக அங்குக் கடை நடத்தி வரும் சில்லறை வியாபாரி ஒருவர் கூறினார்.

முன்னதாக,டேங்ஸ் சந்தைக் கட்டடத்தில் செயல்படும் உணவுநிலையத்தில் இருக்கும் உணவுக்கடை ஒன்றில் பரிமாறப்பட்ட உணவின்மீது எலி ஒன்று விழுந்து துடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது.

இதனையடுத்து, டேங்ஸ் சந்தை கட்டட நிர்வாகத்தின்மீதும் அங்குச் செயல்படும் உணவு நிலையத்தில் இருக்கும் ஐந்து உணவுக்கடைகளின்மீதும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

டேங்ஸ் சந்தைக் கட்டடத்தில் செயல்படும் உணவுக்கடைகள்,பொதுவான பகுதிகள் போன்ற இடங்களில் பூச்சி, எலி போன்ற தொல்லைக்கான அறிகுறிகள் தொடர்பில் சிங்கப்பூர் உணவு அமைப்பையும் தேசிய சுற்றுப்புற அமைப்பையும் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இரண்டு முறை ஆய்வு செய்தனர் என்று அவ்வமைப்புகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

கூரைப் பகுதிகளில் எலி நடமாட்டம் இருப்பதால் டேங்ஸ் சந்தைச் கட்டட நிர்வாகத்தின்மீது தேசிய சுற்றுப்புற அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் சுகாதாரக் குறைபாடுகள் இருக்கும் ஐந்து உணவுக்கடைகளின்மீது சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளின் செயல்திறனை அவ்விரு அமைப்புகளும் கண்காணிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறியது.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளி, நவம்பர் 25ஆம் தேதி உணவுக்கடை ஒன்றின் கூரையிலிருந்து எலி விழுந்த பிறகு எடுக்கப்பட்டதாக ‘ஸ்டோம்ப்’ செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்