உடல் எடையைக் குறைக்கக்கூடிய பொருளாக விளம்பரப்படுத்தப்படும் ‘வி-ஷோ பிரீமிக்ஸ் காப்பி’யை வாங்கவேண்டாம் என்று பயனீட்டாளர்களுக்குப் புதன்கிழமையன்று (ஜூலை 24) சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தத் தயாரிப்பு உள்ளூர் மின் வர்த்தகத் தளங்களில் கிடைக்கப்பெறுகிறது.
அதற்கான விற்பனை விளம்பரங்களை அகற்ற, மற்ற இணைய மின் வர்த்தகத் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைப்பு தெரிவித்தது.
உடனடியாக அந்தப் பொருளின் விற்பனையை நிறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அது எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதயம் தொடர்பான பிரச்சினைகள், மனநோய், மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட பொருள் அதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘சிபுடிராமின்’ எனும் மருத்துவர்களால் மட்டும் பரிந்துரைக்கப்படும் எடை குறைக்க உதவும் அந்தப் பொருள், 2010ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளதாக அமைப்பு கூறியது.
இந்தத் தயாரிப்பை வாங்கியவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உடல்நலம் குறித்து கவலைப்படுவோர் மருத்துவ உதவியை நாடவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

