கலை ஆர்வலரான பானுப்ரியா பொன்னரசு, 34, மாதத்திற்கு ஐந்து முறையாவது மேடை நாடகங்கள், நடனம், பயிலரங்குகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
வரும் செப்டம்பர் முதல், அவரைப் போன்ற 18 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவரும் புதிய ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’ மூலம் கலை நிகழ்ச்சிகளைக் கூடுதலாகக் காணும் வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர்.
வரும் 2028 டிசம்பர் இறுதிவரை சிறப்புத் தொகை பயன்படுத்தப்படலாம்.
சிங்கப்பூரர்களுக்குப் புதிய கலை அனுபவங்களை வழங்கவும் கலை, மரபுத் துறையில் உள்ள உள்ளூர்க் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்தச் சிறப்புத் தொகை வழியமைக்கிறது.
இதன் தொடர்பில் காணொளிப் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பல அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.
பன்முகத்தன்மைக்கு மத்தியில் சிங்கப்பூருக்குரிய கலாசாரமும் அடையாளமும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
“கலாசாரம் தேங்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தலைமுறைக்கும் தனித்துவமான குரலும் உற்சாகமும் உள்ளன. எனவே சிங்கப்பூர்க் கலாசாரத்தைக் கொண்டாட நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை ஆற்ற வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
எஸ்ஜி கலாசாரச் சிறப்புத் தொகை மூலம் கலைப் படைப்புகளை ஆராய்வதோடு உள்ளூர்க் கலைஞர்களுக்கும் ஆதரவளிக்கும்படி பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘மண்டலா ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநரான பானுப்ரியா, கலைத் துறையில் பணியாற்றி வருபவர். இந்தச் சிறப்புத் தொகையை வைத்து இன்னும் அதிகமான கலை அனுபவத்தைப் பெற அவர் காத்திருக்கிறார்.
சிறப்புத் தொகையாக வழங்கப்படும் $100ஐ வைத்து சிங்கப்பூரர்கள் 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் தங்களுக்குப் பிடித்தவற்றை தேர்ந்தெடுத்துக் காணச் செல்லலாம்.
கலைமீது அதிக ஆர்வம் இல்லாதவர்களும்கூட இந்தச் சிறப்புத் தொகை மூலம் பயன்பெறலாம் என்று சொன்ன பானுப்ரியா, புதிய கலை வடிவங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்.
அத்துடன், தனக்குப் பழக்கமில்லாத நிகழ்ச்சிகளையும் இந்தச் சிறப்புத் தொகை மூலம் காண அவர் விரும்புகிறார்.
“நிகழ்ச்சிகளைப் படைக்க செலவு அதிகமாக இருக்கும் நிலையில் நுழைவுச்சீட்டுகளின் விலையும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தச் சிறப்புத் தொகை பெரிதும் கைகொடுக்கும் என நம்புகிறேன்,” என்றார் பானுப்ரியா.
இதில் அடங்கியுள்ள நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் கட்டணம் $50 அல்லது அதற்கும் குறைவு.
‘ரிதம் மசாலா’ எனும் இசை அமைப்பு படைக்கவிருக்கும் நிகழ்ச்சி, இந்தச் சிறப்புத் தொகை நிகழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அமைப்பின் நிறுவனரும் அதன் தலைமை டிரம்ஸ் வாசிப்பாளருமான பாஸ்கரன் ஸ்ரீகரம், இந்தச் சிறப்புத் தொகையானது பலதரப்பட்ட பார்வையாளர்கள், குறிப்பாக, கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் பயனளிக்கும் என்றார்.
“அதிவேக தாள வாசிப்பு, உள்ளம் உருகும் பாடல்கள், துடிப்பான இசை அமைப்பு ஆகிவற்றை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஒரே மேடையில் பல்லினக் கூறுகள் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது,” என்றார் பாஸ்கரன் ஸ்ரீகரம்.
ஆனந்தா மரபுக்கலைகள் கூடம், இந்தியப் பாரம்பரியக் கலைகள் சார்ந்த பயிலரங்கை நடத்தவிருக்கிறது. ‘குடியிருப்பு வட்டாரங்களில் மரபுக் கலைகள்’ எனப்படும் இந்தப் பயிலரங்கு வரும் செப்டம்பரிலிருந்து செயல்படும்.
தீவின் பல்வேறு சமூக மன்றங்களில் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் பல்வேறு பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்களை நேரடியாக அனுபவிக்கலாம்.
மரபுக் கலை தொடர்பான பயிலரங்கில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இந்தச் சிறப்புத் தொகை உதவும் என்று ஆனந்தா மரபுக்கலைகள் கூடத்தின் திட்ட மேலாளர் ஹீரன் நம்புகிறார்.
“பயிலரங்குகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். வெவ்வேறு கலாசார பின்புலத்திலிருந்து வருபவர்களை எட்டும் விதமாக இந்தப் பயிலரங்குகள் அமையும்,” என்று ஹீரன் தெரிவித்தார்.
இந்தச் சிறப்புத் தொகை பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதற்கு அப்பாற்பட்டு, அவை அழியாமல் இருப்பதற்கு ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக ஹீரன் சொன்னார்.
சிறப்புத் தொகையைப் பயன்படுத்த சிங்கப்பூரர்கள் https://sgculturepass.gov.sg இணையத்தளம் மூலம் நிகழ்ச்சிகளுக்குப் பதிவுசெய்யலாம். சிங்கப்பூரர்கள் தங்களின் சிங்பாஸ் கணக்கு மூலம் அந்த சிறப்புத் தொகையைப் பயன்படுத்த முடியும்.
நிகழ்ச்சி படைக்க ஆர்வமுள்ள கலை ஆர்வலர்களையும், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அதையும் வரவேற்கிறது. நடனம், இசை, மேடை நாடகம், மரபுத் திட்டங்கள், இலக்கியக் கலைகள், காட்சிக் கலைகள் சார்ந்த நிகழ்ச்சிகளைப் படைக்க இந்தச் சிறப்புத் தொகை கைகொடுக்கும். விருப்பமுடையவர்கள் https://partners.sgculturepass.gov.sg/ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் தொகையைப் பயன்படுத்த சிரமத்தை எதிர்நோக்குவோர், செப்டம்பர் 28ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில சமூக மன்றங்களில் இருக்கும் உதவிப் பிரதிநிதிகளை அணுகலாம்.
2028 டிசம்பர் இறுதிவரை அனைத்து ‘சர்வீஸ்எஸ்ஜி’ நிலையங்களிலும் சிங்கப்பூரர்கள் உதவி நாடலாம்.