சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) பொதுமக்களுக்கான புதிய அவசரகால ‘எஸ்ஜி அலர்ட்’ எச்சரிக்கை நடைமுறையை மே மாதம் 10ஆம் தேதி நண்பகலில் சோதனை செய்யவிருக்கிறது.
அதற்கான குறுந்தகவல்கள் சிங்டெல் கட்டமைப்பைப் பயன்படுத்தும் கைப்பேசி பயனர்களுக்கு மட்டும் அன்றைய தினம் அனுப்பிவைக்கப்படும். அதன் விவரங்களை எஸ்சிடிஎஃப் புதன்கிழமை (மே 6) வெளியிட்டது.
‘பாப் அப்’ என்ற வகையில் வெளிப்படும் எஸ்ஜி அலர்ட் அறிவிப்புகள் கைப்பேசியில், ஒரு தனிப்பட்ட ஒலியுடனும் அதிர்வுகளுடனும் 10 விநாடிகள் நீடிக்கும்.
கைப்பேசிகளில் அழைப்பு ஓசை தவிர்க்கப்பட்டு, ‘டு நாட் டிஸ்டர்ப்’ (do not disturb) எனப்படும் ‘தொந்தரவு செய்யவேண்டாம்’ என்ற நிலையில் கைப்பேசி இருந்தாலும் அந்த எச்சரிக்கை இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் என்று எஸ்சிடிஎஃப் கேட்டுக்கொண்டது.
எஸ்ஜி அலர்ட் அவசரகால எச்சரிக்கை திட்டத்தில் முதல் கட்டமாக பொதுமக்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. அரசாங்க அமைப்புகள் பெரிய தீ விபத்துகள், வேதியல் அல்லது தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக தெரிவித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள இத்திட்டம் உதவும்.
உள்துறை அமைச்சின் ஹோம்டீம் அறிவியல் தொழில்நுட்ப முகவை, தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்டெல் நிறுவனம், ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இத் திட்டத்தைத் தாம் தொடங்கியதாகக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
இணையத் தொடர்பு இன்றியும் எச்சரிக்கை அனுப்பப்படும்
மே 10ஆம் தேதியன்று நடக்கும் சோதனையின்போது, இணையத் தொடர்பு இல்லாவிட்டாலும் சிங்டெல் நிறுவனத்தின் தொலைபேசி அட்டைகளை பயன்படுத்தும் வெளிநாட்டினர் உட்பட அதன் பயனாளர்கள் அனைவரும் எச்சரிக்கைகளைப் பெறுவர்.

