சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலை மையமாகக் கொண்ட எஸ்ஜி மொழிபெயர்ப்பு 2.0 அறிமுகம்

சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலை மையமாகக் கொண்ட எஸ்ஜி மொழிபெயர்ப்பு 2.0 அறிமுகம்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

26 Sep 2026 - 7:09 pm

3 mins read

செயற்கை நுண்ணறிவு உலகை அதிவேகத்தில் மாற்றிவரும் நிலையில், அதன் பயன்பாட்டில், குறிப்பாக மொழிகள் சார்ந்த பயன்பாட்டில் அதனைப் பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம் என்று இவ்வாண்டின் தேசிய மொழிபெயர்ப்புக் குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடந்த இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் எஸ்ஜி மொழிமெயர்ப்பு 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் மொழிபெயர்ப்பு முயற்சியான எஸ்ஜி மொழிபெயர்ப்பின் புதுப்பிக்கப்பட்ட வடிவம்தான் எஸ்ஜி மொழிபெயர்ப்பு 2.0. தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.

சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவி, சிங்கப்பூரின் மொழிப் பயன்பாடுகள், கலாசாரச் சூழல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் மொழிபெயர்க்கப்பட்ட அரசாங்கக் கலைச்சொற்கள் தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ள 7,000க்கும் மேற்பட்ட அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கலைச்சொற்களும் அடங்கும்.

எஸ்ஜி மொழிபெயர்ப்பு 2.0வின் மொழிபெயர்ப்புத் தரத்தை மதிப்பிடவும் மேம்படுத்தவும் ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணியாளர்கள்’ ஈடுபடுத்தப்பட்டனர்.

“செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புத் துறையைப் பெரிதும் மாற்றியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் மொழியைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதனால் சிங்கப்பூரைப் புரிந்துகொள்ள முடியுமா? நாம் பன்மொழிச் சமூகமாக விளங்குகிறோம். நமது மொழிகள் நமது கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் நம்மை இணைக்கின்றன. எனவே, சொற்களைச் சரியாக மொழிபெயர்ப்பது மட்டுமே நமது இலக்காக இருக்க முடியாது. சொற்களைச் சரியாக மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல், பொருளையும் சூழலையும் சரியாகப் புரிந்துகொள்வதே முக்கியம்,” என்று துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார்.

அரசாங்கம் பொதுமக்களுக்காகக் குறைந்தது 230,000 இணையப் பக்கங்களை நிர்வகித்து வருகிறது. இருப்பினும், அவை அனைத்தும் சிங்கப்பூரின் நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் கிடைப்பதில்லை என்று கூறி, தரமான மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். 

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் மாறிவருகிறது என்று தேசியக் கல்விக் கழகத்தின் ஆசிய மொழிகள், கலாசாரத் துறைத் தலைவரான இணைப் பேராசிரியர் முக்லிஸ் அபு பக்கார் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவைப் போலன்றி, மனிதர்கள் சொற்களின் பொருளைத் தாண்டி, அவை உணர்த்தும் உணர்வுகள், கலாசாரச் சூழல் ஆகியவற்றையும் புரிந்துகொள்கிறார்கள். மொழிபெயர்ப்புத் துறை, ஒரு புதுவிதமான தகவல் தொடர்பு வடிவமைப்பை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் பொறுப்பான முறையில் நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார் இணைப் பேராசிரியர் முக்லிஸ் அபு பக்கார்.

“செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. குறிப்பாக, மொழிபெயர்ப்புத் துறையில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள இங்கு வந்தேன். மொழி சார்ந்த பயன்பாடாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு எவ்வளவு முன்னேறியிருந்தாலும், மனிதர்களின் பங்களிப்பும் மனிதத் தொடர்பும் எப்போதும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் செயற்கை நுண்ணறிவுப் பொறியாளராக பணிபுரியும் 26 வயது முஹம்மத் சுஹைல்.

செயற்கை நுண்ணறிவுப் பொறியாளராகப் பணிபுரியும் முஹம்மத் சுஹைல் மாநாட்டில் கலந்துகொண்டார்.
செயற்கை நுண்ணறிவுப் பொறியாளராகப் பணிபுரியும் முஹம்மத் சுஹைல் மாநாட்டில் கலந்துகொண்டார். - படம்: கிறிஸ்டோ லியோன்

“மாணவர்கள் இக்காலத்தில் அதிகமாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதை நம்மால் நிறுத்த முடியாது. ஆனால், அவர்களது வயதுக்கு ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்ற தவறான எண்ணத்தை உடைத்து, அந்தத் தகவல்களை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்,” என்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன் கூறினார்.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன்.
உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன். - படம்: கிறிஸ்டோ லியோன்
குறிப்புச் சொற்கள்