சிங்கப்பூர் சுதந்திரம் அடைநது 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நோக்கத்தோடு வழங்கப்பட்ட ‘எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்பை’ நிரந்தரமாகத் தொடர்வதற்கான திட்டங்கள் இல்லை என்று நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சரான இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கி குழந்தைகளின் பிறப்புகளைக் கொண்டாட அரசாங்கம் தொடர்ந்து மறுஆய்வு நடத்துகிறது என்பதை அவர் விவரித்தார்.
திருமணமானோருக்கும் பெற்றோருக்கும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். அவற்றில் குழந்தைகள் பெற்றவர்களுக்கான ரொக்க அன்பளிப்பு, பெரிய குடும்பங்களுக்கான சலுகைத் திட்டங்கள் அடங்கும்.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வெலரி லீ, குழந்தைகளுக்கான அன்பளிப்புத் திட்டம் நிரந்தரமாக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அரசாங்கத்தின், திருமணம் மற்றும் பெற்றோர் தொகுப்புத் திட்டத்தில், முழுமையான உதவிகள் வழங்கப்படுகின்றன. வீடு, மருத்துவம், நிதி உதவி, வேலையிட விடுப்பு போன்று குழந்தை வளர்ப்புக்கான பல சலுகைகள் உள்ளன. ‘குடும்பங்களுக்கென தயாரான’ திட்டத்தின் மேல்விவரங்களை லைஃப் எஸ்ஜி (LifeSG) இணையத்தளத்தில் பெறலாம்.

