சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), அதன் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் ஆகியவை சிறப்புக் கட்டணங்களை அறிவித்துள்ளன.
சுற்றுப் பயணங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
இவ்வாண்டு ஏப்ரல் 12 முதல் நவம்பர் 19 வரை பயணம் செய்வதற்கு மொத்தம் 77 இடங்களுக்குச் செல்ல சிறப்புக் கட்டணத்தை பயணிகள் எதிர்பார்க்கலாம். ஆனால் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயணச் சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
எஸ்ஐஏ இணையப் பக்கம், கைப்பேசி செயலி, அதன் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தேசிய விமான நிறுவனமான எஸ்ஐஏ, ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் முன்பதிவு செய்வோருக்கு தென்கொரியாவின் சோல் நகர ஹோட்டல் தங்குவசதியுடன் இருவருக்கு எஸ்ஐஏ வர்த்தக வகுப்பு, 600 வெள்ளி மதிப்புள்ள பெலாகோ (Pelago) பற்றுச்சீட்டு போன்ற பரிசுகளை அதிர்ஷ்டக் குலுக்கலில் வெல்ல வாய்ப்பு உண்டு.
இது தவிர ஸ்கூட், இவ்வாண்டு ஏப்ரல் 14 முதல் அக்டோபர் 25 வரையில் பயணம் செய்ய 60 இடங்களுக்கு சிறப்புக் கட்டணங்களை வழங்குகிறது. இதற்கு ஏப்ரல் 8 முதல் 17க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஸ்கூட் இணையப்பக்கம், செயலி அல்லது நியமிக்கப்பட்ட பயண முகவர்களிடம் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரையில் பயணம் செய்ய ஆகஸ்ட் 15 நண்பகல் முதல் ஆகஸ்ட் 17, 11.59மணிக்குள் முன்பதிவு செய்யும்போது கூடுதல் சலுகைகளும் போனஸ் பயண மைல்ஸ்களும் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த காலக்கட்டத்தில் ஸ்கூட் விமானங்களுக்கு முன்பதிவு செய்யும் கிரிஸ்ஃபிளையர் உறுப்பினர்களுக்கு அறுபது விழுக்காடு அதிக மைல்ஸ் வழங்கப்படும்.
பெலாகோ, கிரிஸ்+ விண்ணப்பங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவு, கடைகள், சுற்றுலாத் தளங்களுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூர் கலாசாரத்தின் அடையாளமாக இருக்கும் கடல்நாக வடிவிலான விளையாட்டுத் திடல், அலங்கார சுவர் டைல்ஸ்கள் போன்றவற்றை காட்டும் பொருள்களும் கிரிஸ்ஷாப் விற்பனைக்கு வெளியிடுகிறது.
“நாம் அனைவரும் சிங்கப்பூரின் 60வது ஆண்டாக நாட்டை கட்டியெழுப்பிய பயணத்தை கொண்டாடும் வேளையில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சிங்கப்பூர் பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு எஸ்ஐஏ குழுமம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று தலைமை நிர்வாகி கோ சூன் போங் குறிப்பிட்டார்.

