சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சாங்கி விமான நிலையமும் ஜூவல் சாங்கி விமான நிலையமும் ஏற்பாடு செய்துள்ளன.
இவை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.
“நமது நாடு வளர்ந்து வரும் அதே வேளையில், சாங்கி விமான நிலையமும் வளர்ச்சி கண்டுள்ளது. சிங்கப்பூரர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் மலரும் நினைவுகளை அள்ளித் தரும் இடமாக சாங்கி விமான நிலையம் திகழ்கிறது,” என்று சாங்கி விமான நிலையத்தின் விமான நிலைய நிர்வாகப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் ஜேசன் கோ தெரிவித்தார்.
துடிப்புமிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்ஜி60 கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ அனைவரையும் சாங்கி விமான நிலையத்துக்கு வரவேற்பதாக திரு கோ கூறினார்.
இலவச கலைநிகழ்ச்சி ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ஜூவலில் நடைபெறும். கலைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் குலுக்கல் முறைப்படி விநியோகிக்கப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் ஜூலை மாதத் தொடக்கத்துக்குள் சாங்கி விமான நிலையத்தில் சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜூவலில் இசையுடன் கூடிய ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் தேசிய தினப் பாடலான ‘ஹோம்’ ஒளிக்கப்படுவதுடன் சிங்கப்பூருக்கே தனித்துவம் வாய்ந்த சின்னங்களும் காட்டப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஒளிக் காட்சி ஆகஸ்ட் மாதம் முழுவதும், நாள்தோறும் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை நடைபெறும்.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 10 மணிக்குக் கூடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.